புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.172.27 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள 7 முக்கியத் திட்டங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
ஜிப்மரில் மாணவர் விடுதி, நவீன ஆராய்ச்சி மையம், புற்றுநோய் சிகிச்சை, இதய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மற்றும் கல்வி உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
Buy Now ! Pay Daily !
மாணவர் விடுதி – ரூ.42.26 கோடி: 400 படுக்கைகள் கொண்ட 7 மாடி ஆண்கள் விடுதி, உணவுக் கூடம், படிப்பறை, லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. ஆராய்ச்சி மையம் – ரூ.30.28 கோடி: மரபணுவியல், புரதவியல், வளர்சிதை மாற்றவியல் உள்ளிட்ட நவீன ஆராய்ச்சி வசதிகளுடன் ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவு மையம் அமைக்கப்பட உள்ளது. துல்லிய புற்றுநோய் சிகிச்சை – ரூ.35 கோடி: நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து, புற்றுநோய் கட்டிகளைத் துல்லியமாகக் குறிவைத்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஏனாம் நோயறிதல் சேவை – ரூ.4.73 கோடி: ஏனாம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஜிப்மர் மூலம் பல்நோக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் நோயறிதல் சேவைகள் வழங்கப்பட உள்ளன. புதிய மருந்தகங்கள்: 3 இடங்களில் மருந்துகள், அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உள்வைப்புகள் மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதிநவீன இதய சிகிச்சை – ரூ.60 கோடி: இதய சிகிச்சைக்குப் பிந்தைய தீவிர சிகிச்சைப் படுக்கைகள் 8-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சிக்கலான இதய நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகள் கிடைப்பதுடன், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் தரமும் மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதற்கான விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






