← முகப்புநாமக்கல் →

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவு – ஜனவரியில் ‘நாமக்கல் 30’ விழா

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, வரும் 2027 ஜனவரி மாதம் ‘நாமக்கல் 30’ என்ற பெயரில் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவு – அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.எஸ்.திலீப், பொ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 1997 ஜனவரி 1-ம் தேதி உருவான நாமக்கல் மாவட்டம், வரும் 2027 ஜனவரி 1-ம் தேதியுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை மக்களுடன் இணைந்து அரசு விழாவாகக் கொண்டாடும் வகையில் ‘நாமக்கல் 30’ நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

முதற்கட்டமாக விழாவிற்கான இலச்சினை வடிவமைப்புப் போட்டி நடத்தப்படும். தொடர்ந்து இலக்கியம், கட்டுரை, ஓவியம், புகைப்படம், குறும்படம், ரீல்ஸ் மற்றும் தீம் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மேலும், மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடுதல், தூய்மைப் பணிகள், புத்தக தானம் மூலம் புத்தகத் திருவிழா, மாபெரும் ரத்ததான முகாம், நாட்டுப்புறக் கலை விழா, பாரம்பரிய நடைப்பயணம் மற்றும் ‘நாமக்கல் சுடர்’ என்ற பெயரில் சுடர் ஓட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நான்கு நகரங்களில் பாதுகாப்பான முறையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் கொல்லிமலை மிளகு, நாமக்கல் கல்சட்டி, ராசிபுரம் பட்டு, குமாரபாளையம் லுங்கி, திருச்செங்கோடு ரிக் வண்டிகள், பரமத்தி வெற்றிலை உள்ளிட்ட தனித்துவமான பொருட்களும் பிரபலப்படுத்தப்படும்.

இந்த விழாவில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !