மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் கலந்து கொண்டு, 84 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 997 உறுப்பினர்களுக்கு ரூ.9 கோடியே 31 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், கடந்த ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.92 கோடி கடன் உதவி வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.125 கோடி கடன் உதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
Buy Now ! Pay Daily !
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி மட்டுமின்றி, தொழில் சார்ந்த ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காகத் தமிழக அரசு சார்பில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருச்செங்கோடு தொகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் கட்ட ரிங் ரோடு இணைப்புச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறினார். சேலம் முதல் திருச்செங்கோடு வழியாக அரியலூர் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் ரூ.3,000 கோடிக்கும் மேல் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாகத் திருச்செங்கோடு தொகுதியில் இன்று ரூ.9.31 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிரின் முன்னேற்றம் என்பது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றமாகும். இதற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார்.
மேகதாது அணை விவகாரம்:
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் அமைதி காப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், மேகதாது திட்டம் தொடர்பாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு உறுதியாகத் துணை நிற்கும் என்றார்.
முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு:
முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை எனக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, முதல்வர் மருந்தகங்கள் மருத்துவத்துறையின் கீழ் இல்லாமல் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படுகின்றன. அவை செயல்படுவதில் சில பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி, மருந்தகங்கள் முறையாகச் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு:
தென்னிந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் தமிழகத்தில்தான் பணவீக்கமும் விலைவாசி உயர்வும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, விலைவாசி உயர்வுப் பிரச்சினை தமிழகத்தில் மட்டும்தான் இருப்பதாகக் கூற முடியாது. முதலமைச்சர் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்படும் என்றார்.
சிங்கப்பெண் திட்டம்:
மகளிர் சுய உதவிக்குழுக்களில் சிங்கப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதா, அல்லது மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயர் மாற்றப்படவில்லை. சிங்கப்பெண் என்பது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வேறு ஒரு திட்டத்திற்குச் சூட்டப்பட்ட பெயர் என்றார்.
பெண்கள் பாதுகாப்பு விவகாரம்:
பெண்கள் தொடர்பான விவகாரங்களில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்ற ஆளுங்கட்சி முயற்சிப்பதாக உதயநிதி குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு, கடந்த ஆட்சியில் பெண்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு இருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கோவையில் நடைபெற்ற சம்பவம் உள்ளிட்டவை அனைவருக்கும் தெரியும். அப்போது காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையும் அரசியல் தலையீடும் இருந்தன.
குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப் பழக்கக் கலாச்சாரமும், காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையும் அடிப்படைக் காரணங்களாக இருந்தன. தற்போது முதலமைச்சர் தலைமையிலான அரசு படிப்படியாக அவற்றைச் சரிசெய்து வருகிறது. விரைவில் இந்தக் குற்றங்கள் களையப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் மீதான குற்றச்சாட்டு:
மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சரும் பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தனது விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் பிரச்சினை முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது என்றார்.
மின்வெட்டு பிரச்சினை:
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு, கோடைக்காலத்தில் மின்வெட்டு இருந்தது உண்மைதான். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இனி மின்வெட்டு இருக்காது என்றும், பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மாசு:
குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளதாகவும், சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் இன்று காலையிலேயே பேசியுள்ளேன். இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குநர் ஆ. சீனிவாசன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ். லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், உதவித் திட்ட அலுவலர் எஸ். வெற்றிச்செல்வன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






