போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், கடலோரப் பாதுகாப்புக் குழுமம், இந்தியக் கடலோரக் காவல்படை, இந்தியக் கடற்படை, சுங்கத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, ரயில்வே மற்றும் கடல் அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Buy Now ! Pay Daily !
கூட்டத்தில், கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை எவ்வாறு தடுக்கலாம்? கடலோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மற்றும் நடமாட்டங்களைக் கண்காணிப்பது எப்படி? தரைவழிப் போக்குவரத்து மூலம் நடைபெறும் கடத்தலை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்துதல், கூட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கடலோரப் பகுதிகள் அதிகம் கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் காவல்துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு துறைகளும் கைகோர்த்துள்ளதால், இராமநாதபுரம் மாவட்டத்தில் இனி கண்காணிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.






