← முகப்பு

போளூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி.. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து போளூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மழைநீரை சேமிப்பதன் அவசியம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை நகராட்சி தலைவர் ராணி சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் வேலன் தலைமை தாங்கினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி, வட்டாட்சியர் அலுவலக சாலை, பஜார் வீதி, சிந்தாதிரிப்பேட்டை தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்றது. இதில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

பேரணியின்போது வீடுகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாத்தல், குளங்கள் மற்றும் ஏரிகளைத் தூர்வாருதல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கருத்துகளையும் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ், வருவாய் ஆய்வாளர் மதிவாணன், நகர்மன்ற உறுப்பினர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !