மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறை சார்பில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் கொள்ளையர்களைக் கண்டறியவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கவும், முக்கியக் குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தைக் கைது செய்யவும் நான்கு சாமானிய பொதுமக்கள் அளித்த தகவல்கள் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளன.
Buy Now ! Pay Daily !
சந்தேக நபரைக் கவனித்த நகைக்கடை ஊழியர்!
கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னதாக இரண்டு, மூன்று முறை நகைக்கடைக்கு வந்து சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிப் பார்த்த இளைஞர் ஒருவரை கடை ஊழியர் கவனித்துள்ளார். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உடைகளில் வந்த அந்த நபர், ஒரே தொப்பியை அணிந்திருந்ததுடன், கையில் கட்டுப் போட்டிருந்ததையும் ஊழியர் நினைவில் வைத்திருந்தார்.
இதுகுறித்து அவர் காவல்துறையினரிடம் அளித்த தகவலின் அடிப்படையில் பழைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது யூடியூபர் நிஷாந்த் என்பதை அடையாளம் கண்டனர்.

தடயங்களை அழித்ததைப் பார்த்த மாடு மேய்ப்பவர்!
கொள்ளைக்குப் பிறகு தடயங்களை அழிக்கும் நோக்கில் நிஷாந்தும் அவரது தந்தை சுரேஷும், கொள்ளையின்போது பயன்படுத்திய உடைகள் உள்ளிட்ட பொருட்களை மாடக்குளம் கண்மாய் அருகேயுள்ள விவசாய நிலத்தில் எரித்துள்ளனர். அப்போது அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையைக் கவனித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகியோரைக் கண்டுபிடித்தனர். மேலும், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ நகைகளையும் மீட்டனர்.
திருப்பூரில் செல்போன் கொடுத்த வழிப்போக்கர்!
காவல்துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்த நிஷாந்த், தனது செல்போனை அணைத்துவிட்டு திருப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார்.அங்கு மீனாட்சியிடம் பேசுவதற்காக, முன்பின் அறிமுகமில்லாத வழிப்போக்கர் ஒருவரிடம் செல்போனை இரவல் வாங்கிப் பேசியுள்ளார்.
அந்தத் தொலைபேசி அழைப்பு தொடர்பாகக் கிடைத்த தகவல்கள், நிஷாந்தின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான காவல்துறையினரின் விசாரணையில் முக்கிய ஆதாரமாக அமைந்தன.
தர்மபுரியில் நிஷாந்தை அடையாளம் கண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்!
இந்த வழக்கின் மற்றொரு முக்கியத் திருப்பமாக,சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த நிஷாந்தை அதன் ஓட்டுநர் அடையாளம் கண்டுள்ளார். தொலைக்காட்சி செய்திகளில் வெளியான நிஷாந்தின் புகைப்படத்தை நினைவில் வைத்திருந்த அவர், பேருந்தில் பயணம் செய்த நபர் மீது சந்தேகமடைந்து தனக்குத் தெரிந்த காவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி தர்மபுரி சேஷம்பட்டி அருகே பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க ஜன்னல் வழியாகத் தப்பிக்க முயன்ற நிஷாந்தை, அங்கு விரைந்த தனிப்படை போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

பொதுமக்களின் விழிப்புணர்வு காவல்துறைக்கு பெரும் பலம்!
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட மதுரை தனிஷ்க் நகைக்கொள்ளை வழக்கில், நகைக்கடை ஊழியர், மாடு மேய்ப்பவர், வழிப்போக்கர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் என நான்கு சாமானியர்களின் பங்களிப்பு காவல்துறையினரின் விசாரணைக்கு முக்கிய உதவியாக அமைந்துள்ளது.
குற்றவாளிகளைக் கண்டறிவதில் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கவனித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.






