← முகப்புமதுரை →

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை!

ரூ.2.32 கோடி மதிப்பிலான குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகளில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை!

மதுரை: மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கற்களை வெட்டி எடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2.32 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தியின் வீட்டில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருடைய உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

குறிப்பாக, பாலமேடு, அலங்காநல்லூர், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சோதனையின்போது கல் குவாரிகளுக்கான டெண்டர் தொடர்பான ஆவணங்கள், ஒப்பந்தப் பத்திரங்கள், குவாரி அனுமதிகள் மற்றும் இதர முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதா, டெண்டர் வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதா, இதனால் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் இந்தச் சோதனை மதுரை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !