← முகப்புமதுரை →

“தல தோனிக்கு நீண்ட ஆயுள் வேண்டும்!” – மதுரையில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்காக மதுரையில் அவரது ரசிகர்கள் நடத்திய சிறப்புப் பிரார்த்தனை கவனம் ஈர்த்துள்ளது. தோனி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வேண்டி, அவரது புகைப்படம் மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

“தல தோனிக்கு நீண்ட ஆயுள் வேண்டும்!” – மதுரையில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, தனது தனித்துவமான ஆட்டத்தாலும், நிதானமான தலைமைப் பண்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்தவர். 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார்.

dhoni
dhoni
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணிக்கு மூன்று முக்கிய ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த பெருமை தோனிக்கு உண்டு. குறிப்பாக, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த வெற்றிக்கான சிக்ஸர் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளது. ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தோனியின் சாதனைகளையும், கிரிக்கெட் பயணத்தையும் போற்றும் வகையில், அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி மதுரை கூடல்புதூர் பகுதியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டிற்காக ஆலயத்தில் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதுடன், கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் இந்தச் சிறப்புப் பிரார்த்தனையை நடத்தினர். அப்போது தோனி தொடர்ந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளப்பட்டது.

dhoni
dhoni

அத்துடன், இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தனது நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் தோனி தொடர்ந்து சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

வழிபாட்டில் பங்கேற்ற தோனியின் ரசிகர்கள், தங்களது அபிமான வீரரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் உற்சாகமாக “தல தோனி… தல தோனி…” என முழக்கமிட்டனர்.

மைதானத்தில் அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள், தற்போது அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் சாதனைகளைத் தாண்டி, ஒரு வீரர் தனது ரசிகர்களின் வாழ்க்கையில் எவ்வளவு ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதற்கு மதுரையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாடே சாட்சியாக அமைந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !