மதுரை அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனிஷ்க் நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த், யூடியூபர் மீனாட்சிக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முக்கியக் குற்றவாளியான நிஷாந்தைக் கைது செய்தனர். இதையடுத்து, அவரைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து வந்த போலீசார், இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Buy Now ! Pay Daily !
அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நிஷாந்த், “அந்த மீனாட்சிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பிரபல யூடியூபர் மீனாட்சிக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியே அவருக்குத் தொடர்பில்லை எனத் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






