வாலாஜாபாத் அருகே உள்ளாவூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஆர்த்தி (21). இவரும், தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவரும் உறவினர்கள் ஆவர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில், இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்காக விஜய் ரூ.5 லட்சம் கடன் வாங்கிச் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருமணச் செலவுக்காக ஆன ரூ.5 லட்சத்தை வரதட்சணையாகக் கேட்டு விஜய்யின் தாயார் மற்றும் சகோதரர்கள் ஆர்த்திக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
Buy Now ! Pay Daily !
மேலும், விஜய் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் ஆர்த்தியை அவமதித்துப் பேசியதுடன், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதுகுறித்து ஆர்த்தி தனது சகோதரிகளிடம் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பல நாட்கள் ஆர்த்தி தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தாய் வீட்டில் இருந்த ஆர்த்தியை, தீபாவளிக்கு முன்பு இரு தரப்பினரும் சமரசம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு மீண்டும் வரதட்சணை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய ஆர்த்தி, பின்னர் உறங்கச் சென்றுள்ளார். இன்று காலை அவரைத் தொடர்புகொள்ள முடியாததால் பெற்றோர் பலமுறை அழைத்துள்ளனர். இதற்கிடையே, ஆர்த்தியின் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், ஆர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தற்கொலை அல்ல, கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, கணவர் வீட்டைச் சேர்ந்த உறவினர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் டிஎஸ்பி, ஆர்த்தியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான ஆறே மாதங்களில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் போலீஸ் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும்.






