← முகப்புஇராமநாதபுரம் →

திடீர் கனமழையால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர். மேலும் அதிகாரிகள் தங்களுக்கு வானிலை குறித்தான அறிவிப்புகளை சரியாக வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டினர்.

திடீர் கனமழையால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப் பகுதிகளில் காலையில் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் திடீரென பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதியிலேயே கரைக்குத் திரும்பினர். இதனால் அன்றைய மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேதனை தெரிவித்த மீனவர்கள், அதிகாலையிலேயே எழுந்து படகுகளுக்குத் தேவையான டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு கடலுக்குச் சென்றோம். ஆனால் மழையும், இடியும் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து கடலில் இருக்க முடியாமல் மீண்டும் கரைக்குத் திரும்பிவிட்டோம்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனால் எரிபொருளுக்குச் செய்த செலவு வீணாகியுள்ளது. இன்று கிடைக்க வேண்டிய வருமானமும் கிடைக்கவில்லை. இந்த இழப்பை எப்படி ஈடுசெய்வது என்று தெரியவில்லை" என வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், வானிலை மாற்றம் மற்றும் மழை எச்சரிக்கை தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே உரிய தகவல்களையோ, முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையோ வழங்குவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் மீனவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, கீழக்கரை கடலோரப் பகுதிகளில் கடல் நீர் சிறிதளவு உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் கரையோரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகள் சில தரைதட்டிய நிலையில் காணப்பட்டன.

மீனவர்களின் வாழ்வாதார இழப்பை கருத்தில் கொண்டு, வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்கவும், கடலோரப் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !