← முகப்புசிவகங்கை →

CEO வழங்கிய புத்தகத்தை வாங்க மறுத்த கார்த்திக் சிதம்பரம்!

சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், கல்வி அலுவலர் பரிசாக வழங்கிய புத்தகத்தை வாங்க மறுத்தது பேசு பொருளாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்களின் பரிந்துரையின் பேரில், 2025–26 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தை கார்த்திக் சிதம்பரம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து, மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

அப்போது நிகழ்ச்சிக்கு வந்த கார்த்திக் சிதம்பரத்தை வரவேற்கும் விதமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி புத்தகம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அப்போது புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்த கார்த்திக் சிதம்பரம், "தமிழ்நாட்டில் புத்தகங்களின் நிலைமை தற்போது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்ன புத்தகம் கொடுக்கிறீர்கள் என்பதைப் படித்துப் பார்த்து, அதற்குள் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொண்டு கொடுங்கள். எனக்கு அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரியாது. அதனால் நான் புத்தகம் வாங்க மாட்டேன்" என்று கூறினார்.

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, புத்தகங்களில் தவறான வரலாற்றுத் தகவல்கள், தவறான எழுத்தாளர் பெயர்கள், இலக்கிய நூல்களின் உள்ளடக்கத்தில் பிழைகள் மற்றும் அதிக விலைக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், பள்ளி நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கப்பட்டபோது கார்த்திக் சிதம்பரம் தெரிவித்த கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !