சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் – தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடர்பான புகார் குறித்து பேசுகையில், இந்த விவகாரத்தை தான் ஊடகச் செய்திகளின் மூலமாகவே அறிந்ததாகக் கூறினார்.
இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதால், அதனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Buy Now ! Pay Daily !
சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்குத் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உடல் ரீதியான அத்துமீறல், அனுமதியின்றித் தொடுதல் அல்லது வாய்மொழி மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களில் வரம்பு மீறப்பட்டதா என்பதை விசாரணை மூலமாகவே கண்டறிய முடியும் என்றார்.
மேலும் அரசு அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அருள் விக்னேஷின் கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லா வழக்குகளிலும் கைது நடவடிக்கை அவசியமில்லை, சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பு அல்லது புகார்தாரர்களை அச்சுறுத்தும் சூழல் இருந்தால் மட்டுமே கைது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக விக்னேஷை கைது செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றும், கைது செய்யாமல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.
அனுபவம் இல்லாத எம்.எல்.ஏக்கள்
தவெகவில் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கு நீண்டகால அரசியல் அனுபவம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பல தேர்தல்களைச் சந்தித்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகக் கூறினார்.
அரசு அதிகாரிகளிடம் எவ்வாறு பழகுவது, பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது, பொது நிகழ்ச்சிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் மதச் சடங்குகளுக்கோ சம்பிரதாயங்களுக்கோ தடை இல்லை என்றார்.
திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகத் தீபம் ஏற்றும் வழக்கம் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கத்தில் இல்லாத புதிய சம்பிரதாயத்தைத் திணித்து அதற்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்றார்.
தமிழகத்தில் தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தொடரும் என்று கூறிய கார்த்திக் சிதம்பரம், தற்போதைய அரசு ஐந்தாண்டு காலத்தையும் நிறைவு செய்யும் என்றும், ஜோசப் விஜய் முதலமைச்சராகத் தொடர்வார் என்றும் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட முடியும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தனிப்பட்ட வாக்கு வங்கி இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாகக் கூறிய அவர், 2014ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளே காங்கிரஸின் தனிப்பட்ட வாக்கு வங்கிக்கான அளவுகோல் என்றார்.
பாஜகவும் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைப் பார்க்க வேண்டும் என்றும், தமிழகத்தில் தேசியக் கட்சிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கி இந்த அளவில்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.





