வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளை உடைத்து, மணலை அள்ளிச் செல்லும் கும்பலால் ஆற்றங்கரைகள் சேதமடைவதுடன், அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கீழப்பசலை கிராமத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டால் ஆற்றின் கரைகள் பலவீனமடைந்து, விவசாய நிலங்களுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Buy Now ! Pay Daily !
இதுமட்டுமின்றி, மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சூடியூர் வரையிலும் வைகை ஆற்றுப் பகுதிகளில் இரவு, பகலாக மணல் அள்ளப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஆற்றின் இயற்கையான நீர்வழிப் பாதையையும், கரைகளையும் சேதப்படுத்தி நடைபெறும் இந்த மணல் திருட்டைத் தடுக்க வேண்டிய அரசுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதால் விவசாயமும், நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி மணல் கொள்ளை தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைகை ஆற்றின் வளத்தைப் பாதுகாக்கவும், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.






