ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை என்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடராகும். ஆசிய நாடுகளின் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும், 'ஏ' அணிகளுக்கும் சர்வதேச அனுபவத்தையும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் வழங்குவதே இதன் பிரதான நோக்கம்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா 'ஏ' அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யு.ஏ.இ அணியை எதிர்கொள்கிறது.
Buy Now ! Pay Daily !
மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து விளையாடும் இந்தத் தொடரில், 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அரையிறுதி வாய்ப்பு நிலவரம்
இந்தத் தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா 'ஏ' அணி, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 'ஏ' அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இதனால், இன்றைய யு.ஏ.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
ஒருவேளை இதில் தோல்வியடைந்தால், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவைப் பொறுத்தே இந்தியாவின் அடுத்தகட்ட வாய்ப்பு அமையும்.
மறுபுறம், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள யு.ஏ.இ. அணிக்கு அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதால், இன்று ஆறுதல் வெற்றிக்காகப் போராடும்.
பேட்டிங் பலமும் எதிர்பார்ப்பும்
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் திலக் வர்மா தொடர்ந்து இரண்டு சதங்களை 107, 100 விளாசி அபாரமான ஃபார்மில் இருப்பது அணிக்குப் பெரும் பலமாகும்.
கடந்த போட்டியில் 70 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா மீண்டும் சிறப்பான தொடக்கத்தைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த இரு ஆட்டங்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 26, 11 மற்றும் ஆயுஷ் பதோனி 2, 0 ஆகியோர் இன்றைய போட்டியில் ஃபார்முக்குத் திரும்ப வேண்டியது அவசியம்.
நடுவரிசையில் குமார் குஷாக்ரா, ரிங்கு சிங், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் இந்திய அணியால் இமாலய இலக்கை எட்ட முடியும்.
நேபாள அணிக்கு எதிரான முதல் போட்டியில் எதிரணியை வெறும் 26 ரன்களில் சுருட்டி மிரட்டிய இந்தியப் பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சற்றுத் தடுமாறினர். வேகப்பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவ்7 விக்கெட்டுகள் மற்றும் ஹர்ஷித் ராணா 6 விக்கெட்டுகள் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து யு.ஏ.இ. பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினால், இந்தியா 'ஏ' அணி எளிதாக வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழையலாம்.






