ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட விரும்பி, தங்களது உடற்தகுதியை சரியாக வைத்துக் கொண்டால், 2027 உலகக்கோப்பைத் தொடரில் அவர்கள் நிச்சயம் இடம்பெறக்கூடும் என்ற நிலைப்பாட்டை பிசிசிஐ வட்டாரங்கள் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்க மைதானங்களில் களத்தின் வேகமும் பவுன்ஸும் நிறைந்த கடினமான ஆடுகளங்களில் விளையாட ரோஹித் மற்றும் கோலியின் அனுபவம் அணிக்கு மிக முக்கியமாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கருதப்படுகிறது. அவர்கள் இல்லாமல் அங்கு வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இருவரும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்பதால், தங்களது ஓய்வு அல்லது விளையாடும் காலம் குறித்து அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நிர்வாக மட்டத்தில் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

Buy Now ! Pay Daily !
சமீபத்திய ஆட்டங்களும் விமர்சனங்களும்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியது விவாதங்களை எழுப்பியிருந்தது. அதற்கு முன்னதாக, வயது மூப்பு காரணமாக இருவரும் அணியில் தொடர்வார்களா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன. 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், 2025-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், 2027 உலகக்கோப்பை அணியில் இவர்கள் இடம்பெறுவது குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சார்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 2027 உலகக்கோப்பையிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து களமிறங்கி கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.






