சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் முதன்மையான உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடராகும்.
இந்தியாவின் பல்வேறு மாநில மற்றும் பிராந்திய அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், ஐபிஎல் மற்றும் இந்திய தேசிய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
Buy Now ! Pay Daily !
தற்போதைய 2026–27 சீசன் நவம்பர் 14, 2026 அன்று தொடங்கி டிசம்பர் 6, 2026 வரை நடைபெற உள்ளது.
இன்று இந்தூரில் நடைபெற்ற குரூப்-பி பிரிவு ஆட்டத்தில், தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
தில்லி அணிக்குத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடித் தமிழ்நாடு பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். மறுமுனையில் யாஷ் துல் விரைவாக ஆட்டமிழந்த போதிலும், ஆர்யா தனது ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
வெறும் 36 பந்துகளில் சதத்தைக் கடந்த அவர் 12 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்தார். இறுதியில் 18.2 ஓவரில் 68 பந்துகளை எதிர்கொண்ட பிரியன்ஷ் ஆர்யா, 19 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 266.18 ஆக இருந்தது.
இதன்மூலம் இரட்டைச் சதத்தை அவர் நூலிழையில் தவறவிட்டாலும், தில்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
276 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணி, தில்லி பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 116 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி அபார வெற்றி பெற்றது.
பிரியன்ஷ் ஆர்யா படைத்த சாதனைகள்
இந்தப் போட்டியின் மூலம் பிரியன்ஷ் ஆர்யா பல்வேறு சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ள அவர், டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்காக ஆடிய கே.எல். ராகுல் பஞ்சாப் அணிக்கு எதிராக எடுத்த 152* ரன்கள் சாதனையை அவர் முறியடித்தார்.
சையத் முஷ்டாக் அலி தொடரின் வரலாற்றில் அதிக தனிநபர் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாகத் திலக் வர்மா எடுத்த 151 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
மேலும் ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக தனிநபர் ரன்கள் எடுத்த பட்டியலில் ஆர்யா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அடித்த 188* ரன்கள் முதலிடத்திலும், கிறிஸ் கெயிலின் 175 ரன்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அடுத்ததாக ஒரே டி20 இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் விளாசி, இந்திய அளவில் புனித் பிஷ்த் அடித்திருந்த 17 சிக்ஸர்கள் சாதனையைத் தகர்த்தார். சர்வதேச அளவில் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் அடித்த 19 சிக்ஸர்கள் உலகச் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், இந்தியா ஏ அணிக்காகவும் கவனம் ஈர்த்துள்ள இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யாவின் இந்த அதிரடி ஆட்டம், விரைவில் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.






