இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 121 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து தரப்பில் ஹென்ரி நிக்கோல்ஸ் 175 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களும் எடுத்தனர். இந்தியப் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், அன்சூல் காம்போஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Buy Now ! Pay Daily !
பேட்டிங்கில் அசத்திய இந்தியாவின் டாப்-4 வீரர்கள்
தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் முதல் 4 பேட்டர்களும் 80 ரன்களுக்கு மேல் எடுத்து இது 12-வது முறையாகவும், நியூசிலாந்து மண்ணில் நிகழ்ந்த முதல் சம்பவமாகவும் இது அமைந்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 89 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கம் தந்தார். தேவ்தத் படிக்கல் பொறுமையாக விளையாடி 175 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் சேர்த்தார்.
இன்னிங்சின் தூணாக நின்று 290 பந்துகளைச் சந்தித்த ராகுல், 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 136 ரன்கள் விளாசினார். கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கில், 146 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் எடுத்த நிலையில், மூன்றாம் நாளின் இறுதி கட்டத்தில் (124.4-வது ஓவரில்) போல்டாகி, வெறும் 2 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.
அதிரடி காட்டிய ரிஷப்
மூன்றாம் நாளின் பிற்பகுதியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், அதன் பின்னர் வேகம் எடுத்தார். ஜேக்கப் டுஃபி வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என, 18 ரன்களை குவித்தார்.
தொடர்ந்து 55 பந்துகளில் தனது 22-வது டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்த பண்ட், ஆட்டநேர முடிவில் 62 பந்துகளில் 55 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் அன்சூல் காம்போஜ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 486 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.






