தேர்தலின் பின்னணியும் வாக்கு எண்ணிக்கையின் திருப்பங்களும்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் பீச் நகர ஆணையத்தின் நான்காவது இடத்திற்கான தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஜெனிபர் லேக்னர் மற்றும் லிசா ஹெரோல்ட் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதினர்.
Buy Now ! Pay Daily !
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் லிசா ஹெரோல்ட் 3,156 வாக்குகளும், ஜெனிபர் லேக்னர் 3,154 வாக்குகளும் பெற்றிருந்தனர். பின்னர் அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையில் 3,160 - 3,158 என்கிற இழுபறி நீடித்தது.
வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால், டுவால் கவுண்டி நகரின் தேர்தல் மேற்பார்வையாளர் ஜெர்ரி ஹாலண்ட் தலைமையில் இயந்திரம் மற்றும் கைமுறையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும் இருவரும் தலா 3,162 வாக்குகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.
ஒரு வாக்கு ஏற்படுத்திய வரலாற்றுத் திருப்பம்
இறுதி முடிவை அறிவிப்பதற்கு முன்பு, வெளிநாடுகளில் வாழும் வாக்காளர்களின் தபால் வாக்குகளுக்காகத் தேர்தல் அதிகாரிகள் காத்திருந்தனர். நவம்பர் 12-ஆம் தேதி கடைசியாக ஒரு தபால் வாக்கு வந்து சேர்ந்தது. அந்த ஒரு வாக்கு யார் பக்கம் விழுந்திருந்தாலும் வெற்றியாளர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.
ஆனால், அந்த வாக்குச்சீட்டைத் திறந்து பார்த்தபோது, வாக்காளர் அட்லாண்டிக் பீச் நகர ஆணையத் தேர்தலுக்கான இடத்தைத் தேர்வு செய்யாமல் காலியாக விடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் இருவரின் வாக்குகளும் 3,162 என்ற நிலையிலேயே நீடித்தன.
சட்ட விதியும் 20 வினாடி 'டாஸ்' போட்டியும்
புளோரிடா மாகாணத் தேர்தல் சட்டத்தின்படி, மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும் வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றிருந்தால், குலுக்கல் அல்லது நாணயம் சுண்டுதல் போன்ற அதிர்ஷ்ட முறைகளின் மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கலாம். அதன்படி, நவம்பர் 13-ஆம் தேதி டுவால் கவுண்டி தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
-முதல் சுற்றில் லிசா ஹெரோல்ட் 'தலை' (Heads) கேட்டார்; ஆனால் நாணயம் 'பூ' (Tails) விழுந்தது. இதனால் ஜெனிபர் லேக்னருக்கு 1 புள்ளி கிடைத்தது.
-இரண்டாவது சுற்றில் ஜெனிபர் லேக்னர் 'தலை' (Heads) கேட்டார்; நாணயமும் 'தலை' விழுந்தது. 2-0 என்ற கணக்கில் ஜெனிபர் லேக்னர் வெற்றி பெற்றதால், மூன்றாவது சுற்று தேவைப்படவில்லை.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் வெறும் 20 வினாடிகளில் நடந்து முடிந்தது. முடிவு அறிவிக்கப்பட்டவுடன், இரு வேட்பாளர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவித் தங்களது நட்பையும் ஜனநாயக மாண்பையும் வெளிப்படுத்தினர்.
வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நெகிழ்ச்சியான கருத்துகள்
-வெற்றி பெற்ற ஜெனிபர் லேக்னர்: "இது நமது நாடு எவ்வளவு மகத்தானது மற்றும் சுதந்திரமானது என்பதைக் காட்டுகிறது. தேர்தலை இப்படியொரு எதிர்பாராத, மறக்க முடியாத வழியில் நிறைவு செய்வோம் என்று நினைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
-தோல்வியடைந்த லிசா ஹெரோல்ட்: முடிவைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட "ஜென்னும் நானும் பல ஆண்டுகளாக இந்தச் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறோம். இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது எவ்வளவு நம்ப முடியாத நிகழ்வாக இருந்தது என்று வியப்போம்" என்றார்.
-தேர்தல் அதிகாரி ஜெர்ரி ஹாலண்ட்: "ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதையும், ஒரு தனிப்பட்ட வாக்கு கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
டுவால் கவுண்டி தேர்தல் வரலாற்றில் இவ்வாறு சமநிலை ஏற்படுவது இது இரண்டாவது முறை மட்டுமே. இதற்கு முன்பு கடந்த 2014-ஆம் ஆண்டு நெப்டியூன் பீச் நகர சபைத் தேர்தலில் சமநிலை ஏற்பட்டபோது, எண்கள் பொறிக்கப்பட்ட பிங்-பாங் பந்துகளைக் குலுக்கிப் போட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






