உலகம் முழுவதுமுள்ள கேம் பிரியர்களிடையே பெரும் மதிப்பை பெற்ற வீடியோ கேம் Grand Theft Auto (GTA). இந்த கேமில் இதற்கு முன்னர் 5 பாகங்கள் வரை வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நேற்று முன் தினம் இதன் 6வது பாகம் உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 14 வருடங்களாக இந்த கேம் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் இதற்காக ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை செலவு செய்திருந்தது.
வசூல் சாதனை:
Buy Now ! Pay Daily !
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த GTA 6 வெளியான முதல் நாளிலேயே 2.5 பில்லியன் டாலர்கள் வருமானத்தை ஈட்டியது. நாளுக்கு நாள் அதன் விற்பனை பில்லியன்களை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பொதுவிடுமுறை விரைவில் தொடங்க உள்ளதால் GTA-6 கேமின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரமாக களமிறங்கிய கேமர்ஸ்:
இதற்கிடையே, இந்த கேமுக்காக பல ஆண்டுகளாக தீவிரமாக காத்திருந்த கேம் பிரியர்கள், கேமை வாங்கியதும் இரவு, பகல் பார்க்காமல், தூக்கம், உணவு என எல்லாத்தையும் மறந்து தீவிரமாக GTA-6 விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். GTA-6 வெளியான உடனேயே அதை வாங்கிய நியூசிலாந்தை சேர்ந்த BrycexD என்ற யூசர் பெயர் கொண்ட நபர், சுமார் 39 மணி நேரம், 38 நிமிடங்களுக்கு இடைவெளியில்லாமல் தொடர்ந்து விளையாடி இந்த கேமை முழுவதுமாக முடித்துள்ளார். இதன்மூலம் GTA6 கேமை அதிவேகமாக விளையாடி முடித்த நபர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதுபோன்ற சேட்டைகளையெல்லாம் செய்வது என்றால் அதற்கு முதல் ஆளாக போய் நிற்பவர்தான் உலக அளவில் பிரபலமான யூட்யூபராக உள்ள I show speed. இவரும் GTA6 கேம் வந்ததும் முதல் ஆளாக ஓடிப்போய் அதை வாங்கி விட்டார். ப்ரோ கேமர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் அடித்து உருட்டி விளையாடியவர் தூக்கம் மறந்து சுமார் 52.30 மணி நேரமாக GTA6 விளையாடி முடித்துள்ளார். கேமர்களின் இந்த GTA வெறியைப் பார்த்து மற்றவர்கள் சற்றே அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதே உண்மை.
யாரும் முயற்சிக்காதீங்க:
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பல மருத்துவ நிபுணர்கள் இந்த செயல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இவ்வளவு மணி நேரம் ஒளிரும் திரைகளை பார்ப்பதும், கேம் விளையாடிக் கொண்டே இருப்பதும் மூளையையும், கண்களையும் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளதால் சிறுவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற மோசமான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.





