மனித கண்டுபிடிப்புகளில் இதுவரை இல்லாத அளவு ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. பொதுமக்களே அன்றாட பயன்பாடுகள் பலவற்றிற்கு ஏஐ கருவிகளை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி மறுபுறம் பலருக்கு பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இதுவரையிலான மனிதர்களின் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்துமே மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. ஆனால் இந்த ஏஐ தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டை மீறிச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருப்பதை ஏஐ ஆய்வாளர்களே சுட்டிக் காட்டுகின்றனர்.
மனிதர்களுக்கு AI-யால் ஆபத்து?
Buy Now ! Pay Daily !
இந்த அசுரவேக ஏஐ வளர்ச்சியில் பெரிய ஆபத்தாக பார்க்கப்படுவது உலக நாடுகள் இடையேயான போரில் ஏஐயின் பயன்பாடு. முன்னதாக அமெரிக்கா தனது ராணுவ திட்டமிடல்களுக்கு ஏஐ-யை பயன்படுத்த ஓபன் ஏஐ நிறுவனத்தை அணுகியது. அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே Claude AIயை இயக்கி வரும் ஆந்த்ரோபோபிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இதுபோன்றதான செயல்பாடுகள் மனித சமுதாயத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் எனவும், வல்லரசு நாடுகள் மனிதர்களை கொல்லும் ரோபோட்டுகளை உருவாக்கவும் தயங்கப் போவதில்லை என்றும் கூறி, இப்படியான செயல்பாடுகளை கண்டித்து ‘Stop Killer Robots’ என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏஐ-களை போரில் பயன்படுத்துவது, மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை தடுக்க, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஐ.நாவில் விவாதம்
இவ்வாறான பல்வேறு அமைப்புகளின் அழுத்தங்களால் ஒருவழியாக ஏஐகளுக்கு மனிதர்களை கொல்வது போன்ற ஆணைகளை கொடுக்க முடியாதபடி அவற்றின் நிரல் அமைப்பை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதத்தை ஐ.நா சபையில் கொண்டு வந்தனர்.
ஆனால் இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளுக்கு பெரிய அபிப்ராயம் இல்லாததாக தெரிகிறது. அவர்கள் நேரடியாக மறுப்பு சொல்லாவிட்டாலும், ஏஐ கருவிகள் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளதாகவும், மனிதர்களுக்கு எதிராக ஏஐ செயல்படுமா என்பது குறித்து இப்போது கவலைப்பட தேவையில்லை என்ற நிலையிலும் மழுப்பலான பதில்களையே வழங்கியுள்ளன. எனினும் இந்த கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்காக அவசரமாக எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படத் தேவையில்லை என்றும், ஆனால் தெளிவான கட்டுப்பாடுகளை ஆராய்ந்து உருவாக்கி அடுத்த 2028ம் ஆண்டில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராயலாம் என்பது பெரும்பாலான நாடுகளின் எண்ணமாக இருந்த நிலையில், இந்த உடனடி கட்டுப்பாடுகள் விதித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது.
ஆனால் கடந்த 1 வருடக் காலத்திற்குள்ளேயே இவ்வளவு வேகமாக வளர்ச்சியடைந்திருக்கும் ஏஐ தொழில்நுட்பம் அடுத்த 2 ஆண்டுகளில் எந்த உச்சத்தைத் தொட்டிருக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்க முடியாது. இப்படியான காலக்கட்டத்தில் ஏஐ பயன்பாடு மீதான எந்தவிதமான கடிவாளங்களும் போடப்படாமல் இருப்பது வல்லரசு நாடுகள் பல இவற்றை தவறான நோக்கில் திசைதிருப்ப காரணங்களாக அமையலாம் என கவலைத் தெரிவிக்கின்றன Stop Killer Robots உள்ளிட்ட அமைப்புகள்.






