← முகப்பு

சென்னையில் சொந்த வீடு பெற வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,157 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளதுடன், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் சுமார் 13,000 வீடுகள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் சொந்த வீடு பெற வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

நம் அனைவருக்குமே சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கும். குறிப்பாக, நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை சொந்த வீடு என்பது மிகப்பெரிய லட்சியமாகவே இருக்கும். அந்த வகையில், சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளிலும் குடிசைப் பகுதிகளிலும் வசித்து வருபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் 9 இடங்களில் புதிதாக 6,157 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 6,157 புதிய வீடுகள்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சென்னையில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் 6,157 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, புதிய குடியிருப்புகள் அமைய உள்ள பகுதிகளில் ஏற்கெனவே வசிக்கும் மக்களைத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய வீடுகளில் என்னென்ன வசதிகள்?

இந்த திட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் 420 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளன. ஒரு படுக்கையறை, வரவேற்பறை மற்றும் சமையலறை கொண்ட 1BHK வீடுகளாக இவை வடிவமைக்கப்படுகின்றன.

மேலும், லிப்ட் வசதி கொண்ட குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.750 பராமரிப்புக் கட்டணமும், லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.250 பராமரிப்புக் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாகத் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்க முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கெனவே வசித்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டப்படும் நிலையில், அங்கு வசித்த தகுதியான குடும்பங்களுக்கு மீண்டும் வீடு ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு வீடு பெறும் பயனாளிகள் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற விரும்புவோர் சில அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் சென்னையில் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வசித்திருக்க வேண்டும்.
  • அரசு ஊழியராக இருக்கக் கூடாது.
  • வருமான வரி செலுத்துபவராகவோ, ஜிஎஸ்டி பதிவு வைத்திருப்பவராகவோ இருக்கக் கூடாது.
  • விண்ணப்பதாரர் பெயரில் சொந்தமாகச் சொத்துகள் இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் என்ன?

  • வீடு கோரி விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • முகவரிச் சான்று
  • கணவன், மனைவி ஆகியோரின் தனித்தனியான பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியல்
  • குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகல்கள்
  • வங்கிக் கணக்குப் புத்தக நகல்
  • வருமானச் சான்றிதழ்

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு கோரும் தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை முதலமைச்சரின் தனிப்பிரிவு அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான உரிய சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

எனவே, சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வரும் தகுதியான குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நனவாக்க இது உதவியாக இருக்கும். சென்னையில் வசிக்கும் தகுதியுடையவர்கள் இந்தத் திட்டத்தின் விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொண்டு, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !