பஞ்சாப் மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப் பழமையான பிராந்திய அரசியல் கட்சி சிரோமணி அகாலி தளமாகும். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பழமையான கட்சிகளில் இதுவும் ஒன்று.
தற்போதைய பஞ்சாப் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2027 மார்ச் 16-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், சிரோமணி அகாலி தளம், தனது 2027ம் ஆண்டிற்கான தேர்தல் நடவடிக்கையாக கூட்டணி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொடக்கக் கால உறுப்பினர்களில் ஒன்றாகவும், தொடர்ந்து 24 ஆண்டுகள் பாஜகவுடன் நெருங்கிய கூட்டாளியாகவும் சிரோமணி அகாலி தளம் செயல்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது.
பின்னர், மத்திய அரசு அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் மீண்டும் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பஞ்சாப் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற முக்கியச் சந்திப்பு
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் வரவேற்றார்.
இந்தச் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணியை அறிவித்தனர்.
அமித் ஷாவின் முக்கிய அறிவிப்புகள்
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் 'மூத்த சகோதரர்' என்ற அந்தஸ்தில் செயல்படும். எனவே, முதல்வர் வேட்பாளர் சிரோமணி அகாலி தளம் தரப்பிலிருந்தே அறிவிக்கப்படுவார் என அமித் ஷா உறுதிப்படுத்தினார்.
மேலும் குரு புரப் நன்னாளில் இந்த இணைவு நிகழ்ந்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி மற்றும் பாதல் குடும்பத்தினருக்கு இடையே நீண்டகால ஆழமான நட்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்து - சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளமாக அமையும் இந்தக் கூட்டணி, பஞ்சாபில் ஊழலை ஒழிப்பது, தேசியவாத சக்திகளை வலுப்படுத்துவது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக வேரறுப்பது ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் தேர்தலைச் சந்திக்கும் என்றார்.
மேலும், தற்போதைய பஞ்சாப் அரசு போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 2029-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்குள் பஞ்சாப் முழுமையாகப் போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
சுக்பிர் சிங் பாதலின் கருத்து
கூட்டணி குறித்துப் பேசிய சுக்பிர் சிங் பாதல், இது வெறும் தேர்தல் கணக்குகளுக்கான அரசியல் கூட்டணி அல்ல என்றும், இரு கட்சிகளுக்கும் இடையே ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பாஜக - அகாலி தளம் இடையிலான உறவு பிரிக்க முடியாதது எனத் தனது மறைந்த தந்தை பிரகாஷ் சிங் பாதல் அடிக்கடி கூறுவதை நினைவுகூர்ந்த அவர், பஞ்சாபின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், சீக்கிய சமூகத்தின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு கட்சிகளும் மீண்டும் இணைந்திருப்பது, வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.






