← முகப்பு

இந்தியா - நேபாளம் உறவில் புதிய மைல்கல்!

நேபாள நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியா - நேபாளம் உறவில் புதிய மைல்கல்!

நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா அரசியலுக்கு வருவதற்கு முன்பு, நேபாளத்தின் பிரபலமான ராப் இசைக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் அறியப்பட்டவர். தனது பாடல்கள் மூலம் அந்நாட்டின் ஊழல் மற்றும் சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

எந்தவொரு பாரம்பரிய அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாமல், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காத்மாண்டு மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து காத்மாண்டு தொகுதியின் மேயராக வெற்றி பெற்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த அரசியல் நிலையற்ற தன்மை, ஊழல் மற்றும் பழைய தலைவர்களின் ஆதிக்கத்தால் மக்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், காத்மாண்டு மேயராகப் பாலேந்திர ஷா செய்த அதிரடி நிர்வாகச் சீர்திருத்தங்கள், அவரை நேபாளத்தின் வருங்காலத் தலைவராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது.

ஊழல் மற்றும் வேலையின்மைக்கு எதிராக 2025-ஆம் ஆண்டில் நேபாளத்தில் 'Gen-Z' இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தால் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் ஆட்சி கவிழ்ந்து, இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது ஊழலுக்கு எதிரான முக்கிய முகமாகப் பாலேந்திர ஷா உருவெடுத்தார்.

2022 முதல் சுயேச்சையாகக் காத்மாண்டு மேயராக இருந்த அவர், 2026 பொதுத் தேர்தலை முன்னிட்டு ரபி லாமிச்சானே தலைமையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சியில் இணைந்தார். அக்கட்சி இவரைத் தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

2026 மார்ச் 5-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஜாப்பா தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியைப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76(1)-ன் கீழ் அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பவுடல் இவரைப் பிரதமராக நியமித்தார். இதனையடுத்து 2026 மார்ச் 27-ஆம் தேதி தனது 35-வது வயதில் நேபாளத்தின் இளம் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன் சுமுகமான மற்றும் வளர்ச்சி சார்ந்த உறவைப் பேணுவதில் கவனம் செலுத்தும் வகையில், பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியாவைத் வந்துள்ளார் பாலேந்திர ஷா.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ள இந்தப் பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், எரிசக்தி மற்றும் ஆன்மிகப் போக்குவரத்தை மேம்படுத்தும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு

நேற்று டெல்லி வந்தடைந்த நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, முதற்கட்டமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்த அவருக்குப் பிரம்மாண்டமான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் வரவேற்றதுடன், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இந்தியாவின் மூத்த அதிகாரிகளையும் பாலேந்திர ஷாவுக்குப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை

வரவேற்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் போது இந்தியா - நேபாளம் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டன.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

பிரதமர் மோடியுடனான சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடர்ந்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசவுள்ளார். புதிய தலைமையின் கீழ் நேபாளம் இந்தியாவுடன் கொண்டுள்ள நட்புறவைப் புதுப்பிக்கும் விதமாக இந்த இரண்டு நாள் பயணம் அமைந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !