தமிழகத்தில் தற்போது பேசுபொருளாக இருக்கும் ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ பதிப்பகப் புத்தகங்கள் கொள்முதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் போலியான புத்தகங்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் உண்மையானவர்களா? என்ற சந்தேகம் எழுந்தது. புத்தகங்களில் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றவை என எழுத்தாளர்கள் குற்றம்சாட்டினர். சில நூல்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் புகார் எழுந்தது. புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு, உண்மையான விலையைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பெரியார் அறிவுலக நூலகத்திலிருந்து சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள மைய நூலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள மாவட்ட நூலக மையத்தில் மாவட்ட நூலக அதிகாரி கணேசன் அவர்களிடம் புதிதாக அகல் விளக்கு நூல் மற்றும் பீனிக்ஸ் நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா? அல்லது ஏதேனும் ஊழல் நடைபெற்றுள்ளதா? என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன்ராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட நூலக மையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை!
‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ பதிப்பகப் புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள மாவட்ட நூலக மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.






