தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையன்று தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
Reach our readers. Contact us to advertise in this space.
இதையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த வீடியோவில் இருந்தவர்கள் மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் முகிலன் (19), தெற்கு சங்கரபேரி பகுதியைச் சேர்ந்த முத்துதுரை மகன் பெரியசாமி என்ற விக்கி (19), குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சுடர் வடிவேலன் மகன் சதீஷ்குமார் (19) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், இளைஞர்கள் கைகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வருவது பொதுமக்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது.
கொலைச் சம்பவங்களைத் தடுக்கவும், ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் நபர்களைக் கண்காணிக்கவும், ரவுடிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.






