மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா முன்னதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதை தொடர்ந்து மசோதாவில் பல மாற்றங்களை ஏற்படுத்தி தற்போது மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
இந்த புதிய மசோதாவில் அனைத்து மாநிலங்களிலும் சட்டசபை தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதிகளில் 50 சதவீத அதிகரிப்பு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மாநில அரசின் உரிமைகளை பாதிக்காத வகையில் உள்ள அம்சங்கள் என கூறி இந்த மசோதாவிற்கு திமுக தனது ஆதரவை அறிவித்துள்ளது.
Buy Now ! Pay Daily !
ஆனால் திமுக கூட்டணியிலிருந்து விலகி தற்போது தவெகவுடன் கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி மறுவரையறையை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த புதிய தொகுதி வரையறை ஒரு ஏமாற்று வித்தை என கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி மறைமுக விமர்சனம்?
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி ”இது தமிழ்நாட்டிற்கும், மொழிக்கும், அம்மக்களுக்கும் மிகவும் முக்கியமான பிரச்சினை. பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மாநிலங்களின் உரிமையை பறிப்பதற்காகவும், அவர்களுடைய அதிகாரத்தை குறைப்பதற்காகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இது பாஜகவின் திட்டமிட்ட சதி.
தமிழகத்தில் எட்டப்பன் என்ற வரலாற்று பிரபலமான ஒரு கதாப்பாத்திரம் உள்ளது. அவர் துரோகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். யாரெல்லாம் பாஜகவின் இந்த தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்களோ அவர்கள் இந்த 21ம் நூற்றாண்டின் எட்டப்பன்கள் என தெரிந்துக் கொள்ளலாம். அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதோடு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பாஜக சக்திகள் ஊடுறுவுவதற்கும் காரணமாகிறார்கள்” என பேசியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து பேசுவது போல உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.






