தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள் இன்று (திங்கட்கிழமை) வருகை தர உள்ளதையொட்டி, கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவில் சுவர்களின் அடிப்பகுதிகளில் படிந்திருந்த திருநீறு, குங்குமம் மற்றும் பல்வேறு அழுக்குக் கறைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Buy Now ! Pay Daily !
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் உலகப் புகழ்பெற்ற பெரிய கோவிலின் அழகையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் வருகை தர உள்ள நிலையில், கோவிலின் உட்புறம், வெளிப்புறம், சன்னதிகள், மண்டபங்கள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலமாகும். சோழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, பொறியியல் திறமை மற்றும் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் அடையாளமாக இந்தக் கோவில் விளங்கி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர்ந்து நிற்கும் விமானம், பிரமாண்டமான நந்தி சிலை, அழகிய சிற்பங்கள், கற்களால் அமைக்கப்பட்ட மண்டபங்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றுப் பெருமையை கொண்டுள்ளன.
இதன் கட்டிடக்கலை அதிசயங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் பார்வையிடுவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தக் கோவில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவிலின் பழமையான கட்டமைப்புகள், சிற்பங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் தஞ்சைக்கு வருகை தர உள்ளனர். இந்தக் குழுவுக்கு நிலைக்குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமை தாங்குகிறார். மொத்தம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று தஞ்சை பெரிய கோவிலை பார்வையிட உள்ளனர். இதையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிலின் முக்கிய பகுதிகள் மட்டுமின்றி, பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள், சன்னதிகளைச் சுற்றியுள்ள பகுதிகள், மண்டபங்கள் மற்றும் திறந்தவெளி வளாகங்கள் ஆகியவற்றிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கோவிலுக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிட அமைப்புகளை பார்வையிடுவதற்கு ஏற்ற வகையில் வளாகத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு, குங்குமம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். பக்தர்கள் அவற்றை பெற்றுக்கொண்டு நெற்றியில் பூசுகின்றனர். சிலர் மீதமுள்ள திருநீறு மற்றும் குங்குமத்தை கோவில் வளாகத்தில் உள்ள சுவர்களின் ஓரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் கோவிலின் சுவர்களின் அடிப்பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் திருநீறு, குங்குமம் படிந்து கறைகள் ஏற்பட்டுள்ளன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இதுபோன்ற செயல்களால் கோவில் வளாகத்தின் தூய்மை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பழமையான கற்சுவர்களின் ஓரங்களில் படிந்துள்ள கறைகள் கோவிலின் தோற்றத்தையும் பாதிக்கும் வகையில் காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தற்போது சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவில் சுவர்களின் அடிப்பகுதிகளில் படிந்துள்ள திருநீறு, குங்குமம் மற்றும் அழுக்குகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுவர்களின் ஓரங்கள் மட்டுமின்றி, கோவில் வளாகத்தில் உள்ள நடைபாதைகள், மண்டபங்கள், பக்தர்கள் அமர்ந்து செல்லும் இடங்கள் மற்றும் சன்னதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கட்டிட அமைப்புகள் என்பதால், சுத்தம் செய்யும் பணிகளின்போது சிற்பங்கள் மற்றும் கற்சுவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கவனமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற நிலைக்குழுவினர் வருகையை முன்னிட்டு நடைபெறும் இந்த தூய்மைப் பணிகள் கோவில் வளாகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதேசமயம், பெரிய கோவிலின் வரலாற்றுப் பெருமையை பாதுகாப்பதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கும் முக்கிய பொறுப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பிரசாதமாக வழங்கப்படும் திருநீறு, குங்குமம் போன்றவற்றை சுவர்களில் கொட்டாமல் உரிய இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும் என்றும், கோவில் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. முக்கியப் பிரமுகர்கள் வருகைக்காக மட்டுமின்றி, நாள்தோறும் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் பெரிய கோவிலின் தூய்மையையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






