வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது தனிப்பட்ட பிரச்னைகள், அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
இதில், இந்து முன்னணி வேலூர் கோட்டச் செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கைகளில் வேலுடன் வந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Buy Now ! Pay Daily !
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களில் முக்கியமானதாக விளங்கும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கிலும், மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, நீதிமன்ற உத்தரவுக்கும், முருகப்பெருமானின் பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் கொண்டு சென்று, தீபம் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.






