← முகப்பு

நீங்கள் இறந்த பிறகும் Instagram கணக்கு செயல்பாட்டில் இருக்குமா ?

ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது Instagram கணக்குக்கு என்ன நடக்கும் தெரியுமா? கணக்கை நினைவுக் கணக்காக மாற்றுவது, Legacy Contact மூலம் நிர்வகிப்பது, நிரந்தரமாக நீக்குவது என Meta நிறுவனம் வழங்கும் வசதிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தச் செய்தியில் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் இறந்த பிறகும் Instagram கணக்கு செயல்பாட்டில் இருக்குமா ?

இன்றைய காலகட்டத்தில் பலரது வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் சமூக வலைதளங்களில்தான் பதிவாகி வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், Reels என ஏராளமான நினைவுகள் சேமிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி வந்த ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது கணக்கின் நிலை என்னவாகும், அந்தக் கணக்கை குடும்பத்தினர் பயன்படுத்த முடியுமா அல்லது நிரந்தரமாக நீக்கப்படுமா, இதற்காக Meta நிறுவனம் வழங்கும் வசதிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஒருவர் உயிரிழந்தால் Instagram கணக்கிற்கு என்ன நடக்கும்?

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சமூக வலைதளங்கள் இன்று வெறும் பொழுதுபோக்கிற்கான தளங்களாக இல்லாமல், ஒருவரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் டிஜிட்டல் ஆவணங்களாக மாறிவிட்டன. குழந்தைப் பருவப் புகைப்படங்கள் முதல் திருமணம், சுற்றுலா, குடும்ப நிகழ்வுகள், நண்பர்களுடனான சந்திப்புகள் எனப் பல்வேறு நினைவுகள் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த ஒருவர் உயிரிழந்தால் அவரது கணக்கு உடனடியாக அழிக்கப்பட்டுவிடுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆனால், ஒருவர் உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்டாகிராம் அந்த கணக்கைத் தானாகவே நீக்கிவிடாது. குடும்பத்தினர் அல்லது தெரிந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் நிறுவனத்திடம் கணக்கை நீக்க கோரிக்கை அளிக்க வேண்டும்.

இதற்காக இன்ஸ்டாகிராம் இரண்டு விதமான வாய்ப்புகளை வழங்குகிறது. ஒன்று, உயிரிழந்தவரின் கணக்கை நினைவுக் கணக்காகப் பாதுகாப்பது. மற்றொன்று, அந்தக் கணக்கை நிரந்தரமாக நீக்குவது.

நினைவுகளுக்காகப் பாதுகாக்கப்படும் கணக்கு

ஒருவர் உயிரிழந்த பிறகும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பழைய பதிவுகள் அழியாமல் இருக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் விரும்பினால், இன்ஸ்டாகிராம் கணக்கை Memorialized Account எனப்படும் நினைவுக் கணக்காக மாற்றக் கோரலாம்.

இந்த மாற்றம் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் பெயருக்கு அருகில் 'Remembering' என்ற அடையாளம் இடம்பெறும். இதன் மூலம் அந்தக் கணக்கின் உரிமையாளர் உயிருடன் இல்லை என்பதைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.

மேலும், ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பதிவுகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவற்றை யார் பார்க்க முடியும் என்பது அந்த நபர் உயிருடன் இருந்தபோது அமைத்திருந்த Privacy Settings அடிப்படையிலேயே இருக்கும். உதாரணமாக, அவர் கணக்கை Private ஆக வைத்திருந்தால், அது தானாகவே Public கணக்காக மாற்றப்படாது.

கணக்கை நிர்வகிக்க யாருக்கு அனுமதி?

கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும்போதே நம்பகமான ஒருவரை Legacy Contact என நியமித்திருந்தால், அவருக்கு சில குறிப்பிட்ட நிர்வாக அனுமதிகள் வழங்கப்படும். அந்த நபர் சுயவிவரப் படத்தை மாற்றுவது, பதிவுகளில் உள்ள Tags-ஐ நிர்வகிப்பது போன்ற வரையறுக்கப்பட்ட செயல்களை மேற்கொள்ளலாம். கணக்கு உரிமையாளர் முன்கூட்டியே அனுமதி அளித்திருந்தால், பகிரப்பட்ட தகவல்களின் நகலையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆனால், இதனால் அந்த நபருக்கு முழுமையான கணக்குப் பயன்பாட்டு உரிமை கிடைத்துவிடாது. உயிரிழந்தவரின் பெயரில் புதிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவிட முடியாது. மற்றவர்களுக்கு Direct Message அனுப்பவோ, அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களைப் படிக்கவோ முடியாது. கணக்கிற்கான Login விவரங்களையும் Instagram வழங்காது.

கணக்கை நிரந்தரமாக நீக்கவும் முடியும்

உயிரிழந்தவரின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் இணையத்தில் தொடர்ந்து இருக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் விரும்பினால், கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும் கோரிக்கை அளிக்கலாம்.

இதற்கு உயிரிழந்தவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உரிய ஆவணங்களுடன் Instagram நிறுவனத்தை அணுக வேண்டும். இறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப உறவை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் போன்றவை கேட்கப்பட்டு, அதனை sசரிபார்த்தப் பிறகு கணக்கை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உயிருடன் இருக்கும்போதே செய்ய வேண்டிய முன்னேற்பாடு

இந்த விஷயத்தில் முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒருவர் தனது Instagram கணக்கின் எதிர்காலம் குறித்து உயிருடன் இருக்கும்போதே முடிவு செய்ய முடியும். Meta Accounts Center பகுதியில் உள்ள Memorialization அமைப்பின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது கணக்கிற்கான Legacy Contact-ஐ நியமிக்கலாம். அல்லது தங்களது மறைவுக்குப் பிறகு கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என விரும்பினால் 'Delete After Death' என்ற விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். இதற்கான அமைப்பை அணுக: Accounts Center → Personal Details → Account Ownership and Control → Memorialization என்ற வழிமுறையைப் பின்பற்றலாம். ஒருவேளை முன்கூட்டியே எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றாலும், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உரிய ஆதாரங்களுடன் கணக்கை நினைவுக் கணக்காக மாற்றக் கோரலாம்.

நாம் வாழும் காலத்தில் சமூக வலைதளங்களில் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோவும் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன. ஆனால், நம்முடைய மறைவுக்குப் பிறகு அந்தத் தகவல்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்த முடிவை முன்கூட்டியே எடுப்பது அவசியமாகிறது.

ஒருபுறம் தனிப்பட்ட நினைவுகளைப் பாதுகாப்பதும், மறுபுறம் தனியுரிமையை உறுதி செய்வதும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு Instagram வழங்கும் நினைவுக் கணக்கு மற்றும் நிரந்தர நீக்குதல் வசதிகள் பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமைகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !