விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தகட்டமாக நிலவில் மனிதர்கள் நீண்டகாலம் தங்கி ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவுகளை பூமியிலிருந்து தொடர்ந்து எடுத்துச் செல்வது சவாலான ஒன்றாகவே உள்ளது. எனவே, நிலவிலேயே உணவுப் பயிர்களை விளைவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர்.
அந்த வகையில், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணைப் போன்ற பொருளில் உருளைக்கிழங்கை வெற்றிகரமாக விளைவித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். நாசாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை ஓரிகன் மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
Buy Now ! Pay Daily !
இந்த ஆய்வு தொடர்பான முடிவுகள் npj Microgravity என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், விரைவாக விளைச்சல் தரக்கூடிய 'மோடோக்' (Modoc) என்ற உருளைக்கிழங்கு வகையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

நிலவு மண்ணில் விவசாயம் செய்வது ஏன் கடினம்?
நிலவின் மேற்பரப்பு முழுவதும் பாறைகள் சிதைந்து உருவான தூசி மற்றும் சிறிய பாறைத் துகள்களால் ஆனது. இதனை 'ரெகோலித்' (Regolith) என்று அழைக்கின்றனர். பூமியில் காணப்படும் விவசாய மண்ணைப் போல இதில் இயற்கையான கரிமப் பொருட்கள் கிடையாது. மேலும், தாவரங்கள் வளர்வதற்கு அவசியமான நைட்ரஜன் சத்தும் இதில் இல்லை.
இதுமட்டுமின்றி, நிலவு மண்ணில் தாமிரம் உள்ளிட்ட சில கன உலோகங்கள் காணப்படலாம். இவை தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன், விளையும் உணவுப் பொருட்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தச் சவாலுக்குத் தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் மண்புழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, மண்புழுக்கள் இயற்கைக் கழிவுகளைச் சிதைத்து உருவாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உரமான 'வெர்மிகம்போஸ்ட்' (Vermicompost) நிலவு மண்ப் போன்ற பொருளுடன் கலக்கப்பட்டது.
5 சதவீத உரத்திலேயே வளர்ந்த உருளைக்கிழங்கு
இந்த ஆய்வில் ஐந்து வெவ்வேறு வகையான நிலவு மண் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வெவ்வேறு அளவுகளில் மண்புழு உரம் கலந்து உருளைக்கிழங்கு பயிரிடப்பட் டுள்ளது.
இதில், இயற்கை உரம் கலக்கப்படாத மண்ணில் வளர்க்கப்பட்ட செடிகளில் வேர்களும் உருளைக்கிழங்குகளும் கிட்டத்தட்ட உருவாகவில்லை.
ஆனால், 5 சதவீதம் மண்புழு உரம் கலந்தபோது செடிகளில் வேர்களும் உருளைக்கிழங்குகளும் வளரத் தொடங்கின. அதேபோல், 30 சதவீதம் மண்புழு உரம் கலந்த மண்ணில் விளைந்த உருளைக்கிழங்கின் விளைச்சல், பூமியின் மண்ணில் வளர்க்கப்பட்ட செடிகளின் விளைச்சலுக்கு இணையாக இருந்தது. நிலவு மண்ணில் நைட்ரஜன் இல்லாததால், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைச் சேர்க்காமல் எந்தப் பயிரையும் வளர்க்க முடியாது என்று இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் அய்மெரிக் கோயர் (Aymeric Goyer) தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு குறித்த ஆய்வும் அவசியம்
இந்த ஆய்வில் விளைந்த உருளைக்கிழங்குகளில் இயற்கையாகக் காணப்படும் இரண்டு வகையான நச்சுப் பொருட்களின் அளவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், சில மாதிரிகளில் கன உலோகங்களின் அளவு சற்று அதிகமாக இருந்துள்ளது. எனவே, அவற்றின் தாக்கம் குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
இந்த ஆய்வில் சில வரம்புகளும் உள்ளன. உண்மையான நிலவு மண்ணுக்குப் பதிலாக, நிலவு மண்ணைப் போன்ற செயற்கைப் பொருளே பயன்படுத்தப்பட்டது. மேலும், இந்தச் சோதனை பூமியில் உள்ள பசுமைக்குடிலில் சிறிய தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் விளைந்த உருளைக்கிழங்குகள் பெரும்பாலும் 10 கிராமுக்கும் குறைவான எடையைக் கொண்டிருந்தன.
பெரிய தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்ட தனிச் சோதனையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் அளவுக்கு உருளைக்கிழங்குகள் வளர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இதன் சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
மேலும், ஆய்வில் விளைந்த உருளைக்கிழங்குகளை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் சுவைத்துப் பார்க்கவில்லை. அவை ஆய்வகப் பரிசோதனைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நிலவில் விவசாயம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் நீண்டகாலம் தங்கும்போது, அங்கேயே உணவுப் பயிர்களை வளர்த்து உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் இது முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.






