← முகப்பு

ரஷ்ய போர்க் கப்பலை தாக்கியது உக்ரைன்தான்!

நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போர், தற்போது ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டி வட ஆப்பிரிக்கக் கடற்பரப்பு வரை விரிவடைந்துள்ளது.

ரஷ்ய போர்க் கப்பலை தாக்கியது உக்ரைன்தான்!

ரஷ்யா - உக்ரைன் போர் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மற்றும் மிக மோசமான ராணுவ மோதலாகும்.

2014-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பிரச்சினை, 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதன் மூலம் பெரும் போராக வெடித்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதன்தொடர்ச்சியாக உக்ரைனில் இருந்து சுமார் 2,700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிபியாவின் பெங்காசி கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் நவீனப் போர்க்கப்பலான 'மெர்குரி', உக்ரைனின் ஆளில்லா கடற்படை டிரோன் படகுகள் மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குத் தங்கள் நாடே காரணம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல் நடந்த விதம்

கிழக்கு லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான 'மெர்குரி' என்ற கார்வெட் ரகப் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

மேற்கு லிபியாவில் உக்ரைன் படைகள் செயல்படும் தளத்திலிருந்து ஏவப்பட்ட கடற்படை டிரோன் படகுகள் இந்தக் கப்பலைக் குறிவைத்துத் தாக்கின.

லிபிய ராணுவ அதிகாரிகளின் முதற்கட்டத் தகவலின்படி, ஏவப்பட்ட டிரோன்களில் குறைந்தது நான்கு இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், இரண்டு டிரோன்கள் கப்பலைத் துல்லியமாகத் தாக்கின.

இதனால் கப்பலில் பயங்கரச் சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுத் தீப்பிடித்ததுடன், கடற்படைத் தளத்திலும் சேதம் ஏற்பட்டது.

ஜெலன்ஸ்கியின் அறிக்கை

இந்தச் சம்பவம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனிலேயே உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 7 கடற்படை டிரோன் படகுகளைப் பயன்படுத்தி ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குறிப்பிட்ட கடல் பகுதிகளில் உக்ரைன் தனது சொந்த ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் விரிவடையும் அச்சம்

தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட 'மெர்குரி' கார்வெட் கப்பல், ரஷ்யக் கடற்படையின் மிக நவீன போர்க்கப்பல்களில் ஒன்றாகும். உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டில்தான் இந்தக் கப்பல் ரஷ்யக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

சமீப வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து 2,700 கி.மீ. தொலைவில் உள்ள லிபியக் கடற்பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது, ரஷ்ய - உக்ரைன் மோதல் வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்திற்கும் பரவக்கூடும் என்ற சர்வதேச அளவிலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !