← முகப்பு

14 மணி நேரம் லிப்டில் சிக்கிய மாணவி!

புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், மின்சாரத் தடை காரணமாக 19 வயது மாணவி ஒருவர் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 மணி நேரம் லிப்டில் சிக்கிய மாணவி!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்ஐடி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த புதன்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து மாணவி ஒருவர் வீடு திரும்பக் கிளம்பியுள்ளார்.

ஐந்தாவது மாடியிலிருந்து லிஃப்ட்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, கல்லூரியில் ஏற்பட்ட தொடர்ச்சியான மின்சாரத் தடையால் லிஃப்ட் நடுவழியில் நின்றது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அப்போது கல்லூரியில் மற்ற மாணவர்கள் யாரும் இல்லாததால், இந்தச் சம்பவம் யாருடைய கவனத்திற்கும் வரவில்லை. இதனால் மாணவி இரவு முழுவதும் லிஃப்ட்டுக்குள்ளேயே தனிமையில் சிக்கிக்கொண்டார்.

பொதுவாக லிப்டில் செல்லும் போது மொபைலில் சிக்னல் கிடைக்காது. அதே போல மாணவி சென்ற லிப்டிலும் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் மொபைலில் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை. மாணவி உதவிக்காக மற்றவர்களை கூக்குரலிட்டு அழைத்த போதும் அது யாருக்கும் கேட்கவில்லை.

மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோரும், அதே கல்லூரியில் படிக்கும் அவரது சகோதரியும் தேடத் தொடங்கினர். புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் குடும்பத்தினர் லோனி கல்போர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கடத்தல் வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். வியாழக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி வரை கல்லூரி வளாகம், அருகிலுள்ள கட்டடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டது.

தேடுதலின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் கல்லூரியின் ஐந்தாவது மாடியில் நின்றிருந்த லிஃப்ட்டுக்குள் மாணவி இருப்பது கண்டறியப்பட்டு, 14 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

மகள் பாதுகாப்பாகக் கிடைத்ததைத் தொடர்ந்து, தங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை எனப் பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் லிஃப்ட்டின் செயல்பாட்டில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு, கல்லூரி நிர்வாகத்திற்குக் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !