← முகப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புகிறாரா ?

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போது தாயகம் திரும்ப போவதாக வெளியான தகவல்கள் வங்கதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புகிறாரா ?

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் அதிபராக மூன்று முறை தேர்வாகி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்தார். இவர் கடந்த 2024 ஜூலை மாதம் அதிபராக இருந்தபோது உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதில், 1971 வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தை ஒடுக்க ஷேக் ஹசீனா அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள், மாணவர் போராட்டத்தை ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சியாக மாற்றினர்.

நிலைமை கைமீறிப் போனதால், 2024 ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ விமானம் மூலம் தப்பித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, வங்கதேசத்தின் வெற்றி நாளான வரும் டிசம்பர் 16-ஆம் தேதி தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வங்கதேச அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹசீனாவின் கோரிக்கையும் அரசின் எச்சரிக்கையும்

கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி வங்கதேச விமானம் மூலமாகவே தாம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள ஷேக் ஹசீனா தரப்பு, தற்போது டெல்லியில் இருந்து டாக்காவிற்குத் திரும்புவதற்கு வங்கதேசத்தின் தேசிய விமான நிறுவனமான 'பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ்' விமானத்திற்கும், உரிய பயண ஆவணங்களுக்கும் ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தாரிக் ரஹ்மானின் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் சாசனத்திற்கு எதிராகத் தாம் நாடு கடத்தப்பட்டதால், வெற்றி நாளில் தம்மைத் தாயகம் அழைத்து வர வேண்டியது அரசின் கடமை என அவரது செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி தெரிவித்துள்ளார்.

ஆனால், வங்கதேச அரசு இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா நாடு திரும்பினால், உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார் என அரசுத் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர், "ஷேக் ஹசீனா ஒன்றும் சாதாரணப் பயணி அல்ல; முறையான நாடு கடத்தல் நடைமுறைகளின் கீழ் கைவிலங்குடனோ அல்லது கடுமையான கண்காணிப்பிலோ மட்டுமே அவர் கொண்டு வரப்பட முடியும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பும் அரசியல் நகர்வுகளும்

ஷேக் ஹசீனா திரிபுரா அல்லது மேற்கு வங்கத்தின் பெட்ராபோல் - பெனாபோல் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் நுழையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இதற்கேற்ப அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் சமீபத்தில் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மேஜர் ஜெனரல் முகமது அஷ்ரபுஸ்ஸமான் சித்திக் திரிபுரா எல்லையையொட்டிய பிரம்மன்பரியா மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், சர்ச்சைக்குரிய நபர்கள் சட்டவிரோதமாக ஊடுருவாமல் தடுக்கப் படைவீரர்களையும் பொதுமக்களையும் உஷார்படுத்தியுள்ளார்.

மறுபுறம், நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்களான ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷபிகுர் ரஹ்மான் மற்றும் தேசிய குடிமக்கள் கட்சித் தலைவர் நஹித் இஸ்லாம் ஆகியோரைப் பிரதமர் தாரிக் ரஹ்மான் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !