← முகப்பு

ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பெண்ணுக்கு சவுக்கடி தண்டனை!

ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடியதற்காக ஈரானியப் பாடகி மற்றும் அவரது இசைக் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு தலா சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பெண்ணுக்கு சவுக்கடி தண்டனை!

1997-ஆம் ஆண்டு வடக்கு ஈரானின் நவ்சஹார் பகுதியில் பிறந்த 29 வயதான பரஸ்தூ அஹ்மதி, டெஹ்ரானில் உள்ள சூர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கப் பிரிவில் பட்டம் பெற்றவர். சிறந்த பியானோ கலைஞரான இவர், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களைப் பாடுவதன் மூலம் கவனம் பெற்றவர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெஹ்ரானுக்குத் தெற்கே அமைந்துள்ள கோம் நகரில் ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து, ஹிஜாப் அணியாமல் அஹ்மதி பாடிய காணொளி ஒன்று யூடியூப் தளத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஈரானியச் சட்டங்களின்படி, பொதுவெளியில் பெண்கள் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதோடு, கட்டாயம் ஹிஜாப் மற்றும் உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இணையத்தில் வெளியான அந்தக் காணொளியைத் தொடர்ந்து, "ஆபாசமான மற்றும் ஒழுங்கீனத்தைத் தூண்டும் வகையிலான உள்ளடக்கத்தை உருவாக்கிப் பரப்பியதாக" அஹ்மதி மற்றும் அவரது குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் இவர்களுக்கான தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, நவம்பர் 23-ஆம் தேதி அஹ்மதி உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 74 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பாடகியின் வழக்கறிஞர் முஸ்தஃபா நிலி உறுதிப்படுத்தியுள்ளார்.

சவுக்கடி தண்டனையோடு மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் எந்தவொரு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது என்றும், பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கண்டனங்களும் ஈரானின் பதிலடியும்

இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்குப் பல்வேறு மேற்கத்திய நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது அடிப்படை மனித உரிமைகளுக்கும், சர்வதேசச் சட்டங்களுக்கும் எதிரானது என அவை விமர்சித்துள்ளன.

ஆனால், இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ள ஈரான் அரசு, மேற்குலக நாடுகள் முதலில் தங்கள் நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைச் சரிசெய்ய வேண்டும் எனப் பதிலடி கொடுத்துள்ளது.

ஏற்கெனவே 2022-ஆம் ஆண்டு முறையாக ஹிஜாப் அணியாத காரணத்திற்காகக் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண் காவலில் உயிரிழந்தது ஈரானில் பெரும் மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டது. அந்தச் சூழலின் தொடர்ச்சியாக, தற்போது பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு வழங்கப்பட்டுள்ள சவுக்கடி தண்டனை ஈரானுக்குள்ளும் வெளியிலும் பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !