← முகப்பு

SRH அணிக்கு விழுந்த பேரிடி!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 20-வது சீசனான 2027 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விலக முடிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், தனது பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். டிராவிஸ் ஹெட்டின் இந்த முடிவு ஹைதராபாத் அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SRH அணிக்கு விழுந்த பேரிடி!

'டிராவிஷேக்' சகாப்தத்திற்கு இடைவெளி

கடந்த சில சீசன்களாக ஐபிஎல் களத்தில் எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த கூட்டணி டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி. ரசிகர்களால் செல்லமாக 'டிராவிஷேக்' என்று அழைக்கப்பட்ட இந்த இடதுகை தொடக்க ஜோடி, பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டதாக இருந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ஒரு அதிரடி இடதுகைத் தொடக்க ஆட்டக்காரர் நிச்சயம் தேவை என்ற தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியின் தீர்க்கமான முடிவால், ரூ. 6.8 கோடிக்கு டிராவிஸ் ஹெட்டை ஹைதராபாத் அணி வாங்கியது. அந்த நம்பிக்கையை முழுமையாகக் காப்பாற்றிய ஹெட், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து ஐபிஎல் வரலாற்றில் பல சாதனை ரன்களைக் குவிக்க அடித்தளமிட்டார். தற்போது ஹெட்டின் விலகலால், இந்த அதிரடித் தொடக்கக் கூட்டணிக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன? ஆஸ்திரேலியாவின் நெருக்கடியான அட்டவணை

டிராவிஸ் ஹெட்டின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், 2027-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமான மற்றும் நெருக்கடியான ஆண்டாக அமையவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், 2027-ல் வரவிருக்கும் முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு வீரர்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என சூசகமாகத் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலிய அணி சுமார் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது தவிர, 2027 ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி, அதனைத் தொடர்ந்து ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கிலாந்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர், மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய மெகா தொடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மூன்று ஃபார்மட் (Test, ODI, T20) கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத தூணாக இருக்கும் டிராவிஸ் ஹெட், இந்த முக்கியத் தொடர்களுக்குத் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயார்படுத்திக்கொள்ளவே ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !