தமிழ்நாட்டின் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும், தி.மு.க. மூத்த நிர்வாகியுமான பி. மூர்த்தி அவர்களின் மதுரை இல்லத்தில், கனிம வள முறைகேடு வழக்கு தொடர்பாக மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை மதுரை அரசியல் வட்டாரத்திலும், மாநில அளவிலும் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கல் உடைக்கும் கிரஷர் நிறுவனங்கள், செம்மண் குவாரிகள் மற்றும் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறியும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களின் பேரில் கனிமவளத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சத்திரவெள்ளாளப்பட்டி பகுதியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், உரிய அனுமதி பெறாத நிலப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும் சரளைக் கற்களை வெட்டி எடுத்தது ஆய்வில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனிமவளத்துறையின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இந்த முறைகேடுகளால் அரசுக்கு முறையே ரூ. 2.32 கோடி மற்றும் ரூ. 3.07 கோடி என மொத்தம் ரூ. 5.39 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்புகார்களின் அடிப்படையில் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தனித்தனியாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Buy Now ! Pay Daily !
முறைகேடு தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் முன்னாள் அமைச்சர் வீட்டில் உள்ளனவா என்பதைக் கண்டறியக் காவல்துறையினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்: மதுரை ஐயர் பங்களா பகுதியில் உள்ள எழில் நகர், ரோஜா வீதியில் அமைந்துள்ள பி. மூர்த்தியின் இல்லத்தில் அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டது. முதலாம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மதுரை மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
தொண்டரின் கோஷத்தால் கோபமடைந்த மூர்த்தி
சோதனை நடைபெறும் தகவலறிந்து பி. மூர்த்தியின் இல்லத்திற்கு வெளியே தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சோதனையைச் சுமுகமாக நடத்தவும் அந்தப் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது விசாரணைக்காக போலீசார் மூர்த்தியை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்த போது, வெளியே கூட்டத்தில் இருந்த மூர்த்தியின் ஆஸ்தான தொண்டர் ஒருவர், போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டார், பயந்து போன மூர்த்தி "டேய் யாருடா அவன்" என்று கோபமாக சைகை காட்டியது தற்போது நெட்டிசன்களின் மீம் கண்டன்டாக மாறி வருகிறது.
தவெக ஆட்சி அமந்த பின் திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த ரைடுகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.






