← முகப்பு

தொழில் முதலீடு ரகசியங்கள் கசிந்தது எப்படி? – தமிழக அரசின் விளக்கம்!

தமிழ்நாட்டின் தொழில் முதலீடு ரகசியங்களை ஆந்திராவிற்கு கசியவிட்டதாக கூறி Guidance TN முகமையில் பணியாற்றிய 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் முதலீடு ரகசியங்கள் கசிந்தது எப்படி? – தமிழக அரசின் விளக்கம்!

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தது முதலாக பல்வேறு தொழில் முதலீடுகள் தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு சென்று விட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவகாரத்தில், விமான நிலையத் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு நடுவே முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பா சென்றார். அங்கு நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸை அவர் தொடங்கி வைத்த பிறகு, சில நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் தவெக ஆட்சித் தொடங்கியது முதல் அதிகாரப்பூர்வமான பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் நடைமுறைக்கு வராதது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களை கையாளும் TN Guidance முகமையில் பணி செய்த 15 பேர் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை ஆந்திராவிற்கு கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சியமைத்த பிறகு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ராயல் என்ஃபீல்டு மோட்டார் நிறுவனர், ஹயர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என பல கோடி முதலீடுகள் கைநழுவி ஆந்திராவிற்கு சென்றன. முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தனது பெரும் முயற்சியின் பயனாக ஓசூரில் அமையவிருந்த AMCA Flight Testing Project தவெக ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத்தன்மையால் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக அப்போது விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது TN Guidance ல் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நடந்திருக்கும் நிலையில், முன்னதாக இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டிடம் இருந்து கைநழுவி போனதில் இந்த பணியாளர்கள் கசிய விட்ட தகவல்கள் காரணமாக இருக்குமா என்பது பற்றிய துறைசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தகவல் கசிவை வெறும் பணி நீக்கத்தோடு தமிழக அரசு முடித்துக் கொள்கிறதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இங்கு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஆந்திர அரசின் முதலீட்டு முகமையில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் வெறும் பணி நீக்கம் மட்டும் என்பது சரியா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ள அதேசமயம், அவர்களில் சிலர் தவெக ஆட்சி அமைந்தபோது அவர்களே பணியை விட்டு விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக நிறுவனத்திற்குள் நிலவும் உறவுநிலை சார்பை சுட்டிக்காட்டி அவர்கள் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு கடிதங்கள் எழுதியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விஷயத்தில் என்ன நடந்தது? எந்தெந்த முதலீடு விஷயங்கள் கசிந்தன? பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றிய விரிவான விளக்கத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

Update: இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள Guidance Tamilnadu முகமை தெரிவித்துள்ளதாவது:

  • 2026 ஜூலையில் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவிலான ராஜினாமாக்கள் எதுவும் நடைபெறவில்லை.
  • பணியாளர் விலகல் என்பது ஒரு இயல்பான நிறுவன நிகழ்வாகும். கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில், சிறந்த தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம், மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்பக் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகப் பணியாளர்கள் விலகுகின்றனர்.
  • வேறு இடங்களில் வாய்ப்புகளைத் தேட விரும்புவோர் உட்பட, தனது பணியாளர்களின் தொழில்முறை அபிலாஷைகளை கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் எப்போதும் மதித்து வருகிறது.
  • முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு எப்போதும் தனது அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியைப் பேணி, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தொடர்ந்து ஒரு விருப்பமான முதலீட்டு இடமாகத் திகழ்கிறது.
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !