← முகப்பு

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா தவெக? – டிடிவி தினகரன் கண்டனம்!

மதுரையில் பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது புகார் அளிக்கச் சென்றபோது அமைச்சரின் தலையீட்டால் போலீஸார் வழக்குப்பதிய மறுத்ததாக வெளியான செய்தி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா தவெக? – டிடிவி தினகரன் கண்டனம்!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது: மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் புகாரைப் பெற காவல்துறையினர் மறுப்பதாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிப்பதற்கு முன்பே புகாரைப் பெற மறுப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய காவல்துறையே அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதும் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து:

அறிவிக்கப்படாத மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் எனத் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளும் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றைச் சீரமைத்து மேம்படுத்த வேண்டிய அமைச்சரோ, காவல் நிலையத்திற்குள்ளேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குச் சென்று காவலர்களை மிரட்டி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து ரீல்ஸ் வெளியிடுவது; எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி அதிகாலை நேரத்தில் பொருளாதார வல்லுநர்களைக் கைது செய்யுமாறு காவலர்களை ஏவிவிடுவது; பாதிக்கப்பட்டவர்களின் புகாரைக்கூடப் பெறக்கூடாது எனக் காவல்துறையினரை மிரட்டுவது என அமைச்சர்களின் இத்தகைய அடாவடித்தனமான செயல்பாடுகளை பார்க்கும்போது, காவல்துறை உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போதை மாநிலமான தமிழ்நாடு:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுடன், இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படும் மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், குற்றங்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களையே அமைச்சர்கள் தங்களது அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தடுக்க முடியாத முதலமைச்சரின் நிர்வாகத் தோல்வியால், ஒட்டுமொத்தத் தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு அசாதாரணமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இரட்டை வேடம்:

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக மேடைகளிலும் மைக் முன்னாலும் நீட்டி முழங்கும் தவெக அமைச்சர்கள், உண்மையில் காவல்துறையைத் தங்களது அரசியல் ஆதாயங்களுக்கான கைப்பாவையாக மாற்றி வைத்திருப்பதே அம்பலமாகியுள்ளதொடு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடாமல் காவல்துறையினருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கும் அமைச்சர்களின் இரட்டை வேடம், அவர்களின் போலி நேர்மையையும் பசப்பு வார்த்தைகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது!

எனவே, காவல்துறை என்பது அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இயங்கும் அரசியல் கருவி அல்ல; அது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய மிக முக்கியமான அரசியலமைப்பு அமைப்பு என்பதை உணர்ந்து காவல்துறையினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையில் முழுமையான சுதந்திரத்துடனும் நேர்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !