யூடியூப் தளத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள்: மலேசியாவில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ரூ.13,000 கோடி இழப்பீடு கோரி வழக்கு!
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம், யூடியூபில் வெளியாகும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள், மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் தொடர்பான வீடியோக்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மலேசிய தகவல் தொடர்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
Buy Now ! Pay Daily !
மேலும் இதற்கான நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தபோதிலும், பிரபல மலேசிய Blogger ஒருவர் பதிவிட்ட சில பதிவுகளை மீண்டும் வெளியிட யூடியூப் அனுமதித்ததாகவும் ஒழுங்குமுறை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
இரண்டு வழக்குகளிலும் தலா 300 மில்லியன் மலேசிய ரிங்கிட் வீதம், மொத்தம் 600 மில்லியன் மலேசிய ரிங்கிட் இழப்பீடாகக் கோரப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.13000 கோடியாகும்.
மலேசிய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்கள், யூடியூபின் உள்ளடக்கக் கண்காணிப்பு அமைப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஆணையம் தரப்பிலிருந்து யூடியூபிற்கு 74,703 புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவற்றில் கிட்டத்தட்ட அனைத்தும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பானவை ஆகும். இதில் 4,950 சூதாட்டம் தொடர்பான புகார்களுக்கு யூடியூப் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 1,468 புகார்களுக்குப் பதிலளிக்கவோ அல்லது அந்த உள்ளடக்கங்களை நீக்கவோ 30 நாட்களுக்கும் மேலாக யூடியூப் எடுத்துக்கொண்டதாகவும் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், தனது உள்ளடக்கக் கண்காணிப்பு நடைமுறையை கூகுள் நிறுவனம் நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து யூடியூப் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் கூறுகையில், ஆன்லைன் பாதுகாப்பைத் தங்கள் நிறுவனம் மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், நிறுவனத்தின் கொள்கைகளின் கீழ் புகாரளிக்கப்படும் உள்ளடக்கங்களை முறையாக ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பெறும் உரிமையைப் பாதுகாக்க முயற்சிக்கும் அதே வேளையில், உள்நாட்டுச் சட்டங்களைப் பின்பற்றி மலேசிய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் டேட்டா சென்டர்ஸ், தூய எரிசக்தி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றிற்காக மலேசியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்த சில வாரங்களிலேயே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயனர்கள் பகிரும் உள்ளடக்கங்களுக்கான பொறுப்பிலிருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் தப்பிப்பதை அரசாங்கங்கள் இனியும் அனுமதிக்கத் தயாராக இல்லை என்பதையே இந்தப் புதிய வழக்குகள் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.






