← முகப்பு

தாஜ்மஹாலை சுற்றிவளைத்த குரங்கு கூட்டம்!

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதும், சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படுவதும் தொடர் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தாஜ்மஹாலை சுற்றிவளைத்த குரங்கு கூட்டம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது.

வழக்கமாக தாஜ்மஹாலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது இயல்பு, ஆனால் தற்போது இதற்கு மாறாக நேற்று 500க்கும் மேற்பட்ட பெரும் குரங்கு கூட்டம் ஒன்று தாஜ்மஹாலை நோக்கி படையெடுத்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த குரங்குகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் உணவு பொருட்களை அவர்களிடமிருந்து ஆக்ரோஷமாக பிடுங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு வாயில், மேற்கு வாயில் மற்றும் அரச வாயில் பகுதிகளில் குரங்குக் கூட்டங்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குரங்குகளை விரட்ட எடுக்கப்படும் தற்காலிக முயற்சிகள் பலனளிக்காததால், பயணிகளைத் துரத்துவதும் கடிப்பதும் தொடர்ந்து நிகழ்கின்றன.

முதன்மை நினைவுச்சின்னத்திற்கு அருகிலுள்ள புல்வெளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் திடீரெனக் கூடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கு முன்னர் வளாகத்தில் உள்ள நீரூற்றுக்குள் குரங்குகள் குதித்து விளையாடும் காணொளிகளும் வெளியாகிப் பேசப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல்கள்

தாஜ்மஹாலுக்கு சுற்றுலா வந்த பிரேசிலைச் சேர்ந்த 83 வயதுப் பயணி மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொரு பயணி ஆகிய இருவர் குரங்கு கடியால் பாதிக்கப்பட்டு, முதலில் அருகிலுள்ள மருத்துவ நிலையத்திலும் பின்னர் மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதந்தொடர்ச்சியாக மேற்கு வாயில், மெஹ்மான் கானா, மசூதி மற்றும் அரச வாயில் ஆகிய பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொரியப் பயணி ஒருவர் கடிபட்ட பிறகு அவசர ஊர்திக்காகக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த சம்பவமும் அவசர மருத்துவ வசதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியது.

நிர்வாகத் தாமதமும் சட்டச் சிக்கல்களும்

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் நிர்வாக ரீதியான சவால்கள் தடையாக நிற்கின்றன. தொல்லியல் துறை, மாநகராட்சி மற்றும் பிற நிர்வாக அமைப்புகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் நடவடிக்கைகளில் சுணக்கம் காணப்படுகிறது.

தொல்லியல் துறை உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகிய பிறகும் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் குரங்குகளைக் கையாளுவதில் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், பிடிக்கப்படும் குரங்குகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முயன்றபோது பிற மாவட்டங்கள் ஏற்கத் தயங்கியதால் முந்தைய திட்டங்கள் முடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகப் பாரம்பரியச் சின்னமான தாஜ்மஹாலின் பாதுகாப்பும், அங்கு வரும் லட்சக்கணக்கான பயணிகளின் நம்பிக்கையும் குரங்குத் தொல்லையால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !