கேரளம்: சமூக வலைதளங்களில் வெளியாகும் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களைப் பார்த்து அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் சரும நிறத்தை மாற்றுவதாகக் கூறப்படும் விளம்பரங்கள் பலரையும் ஈர்க்கின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி அழகு சாதனக் கிரீம் பயன்படுத்திய 17 வயது கேரள சிறுமிக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, இன்ஸ்டாகிராமில் சமூக ஊடகவியலாளர்கள் (Influencers) பரிந்துரைத்த அழகு சாதனக் கிரீமைப் பார்த்து வாங்கியுள்ளார். முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை நீக்குவதாக விளம்பரப்படுத்தப்பட்ட அந்தக் கிரீமை கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
ஆரம்பத்தில் சருமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டதாகக் கருதிய சிறுமி, தொடர்ந்து அந்தக் கிரீமை வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், நாளடைவில் அவரது உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கால்களில் வீக்கம், குறைந்த ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதுடன், நடப்பதற்கும் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ரத்தம் மற்றும் உடலில் அதிக அளவு பாதரசம் (Mercury) கலந்திருப்பதைக் கண்டறிந்தனர். இதனால் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் Membranous Nephropathy என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிவித்துள்ளது.
கிரீமில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 12,500 மடங்கு பாதரசம்
மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி பயன்படுத்திய கிரீமில் ஒரு மில்லியனுக்கு 12,500 பாகங்கள் (12,500 ppm) அளவுக்கு பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அழகு சாதனப் பொருட்களில் அனுமதிக்கப்படும் அளவு ஒரு மில்லியனுக்கு ஒரு பாகத்திற்கும் குறைவாகும்.
இதற்கிடையே, கிரீம் தயாரித்த நிறுவனத்திடம் தனது உடல்நலப் பாதிப்பு குறித்து சிறுமி புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிறுமியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்கள் அல்லது Influencers பரிந்துரைக்கும் அனைத்துப் பொருட்களும் பாதுகாப்பானவை என்று உறுதியாகக் கூற முடியாது.
அதனால் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அதன் தயாரிப்பு தயாரிப்பு நிறுவனம், முழுமையான முகவரி, மூலப்பொருட்கள், தயாரிப்பு உரிம விவரங்கள், காலாவதி தேதி ஆகியவற்றை சரிபார்க்கவும். ஒரே இரவில் முகம் வெண்மையாகும், சில நாட்களில் கரும்புள்ளிகள் மறையும் போன்ற அதீத வாக்குறுதிகளை நம்பி பொருட்களை வாங்க வேண்டாம். முகப்பரு, கரும்புள்ளிகள், சரும நிறமாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தகுதிபெற்ற தோல் மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.நம்பகமான விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்குங்கள். லேபிள் இல்லாத, தயாரிப்பு விவரங்கள் குறிப்பிடப்படாத கிரீம்களைப் பயன்படுத்தாதீர்கள். பொருளைப் பயன்படுத்திய பிறகு வீக்கம், அரிப்பு அல்லது வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்தி மருத்துவரை அணுகுங்கள்.முக்கியமாக, சரும அழகை அதிகரிப்பதாகக் கூறும் விளம்பரங்களை விட உடல்நலமே முக்கியம். சமூக வலைதளங்களில் கிடைக்கும் பிரபலமான பரிந்துரையைவிட மருத்துவ நிபுணரின் ஆலோசனைக்கு முன்னுரிமை கொடுப்பதே எப்போதும் பாதுகாப்பானது.






