ஒரு கைப்பிடி மண்ணில் இத்தனை புதுமைகளா? படித்துவிட்டு வேலை தேடி நிறுவனங்களின் கதவுகளைத் தட்டாமல், தங்களது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பரியத் தொழிலுக்கே நவீன முகம் கொடுத்து வருகின்றனர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள்!
மானாமதுரை என்றாலே மண்பாண்டத் தொழிலுக்கு தனி அடையாளம் உண்டு. இங்கு தற்போது கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள், பல்வேறு வடிவிலான தீப விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் அன்றாடத் தேவைக்கான மண் அடுப்புகள், உண்டியல்கள் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
Buy Now ! Pay Daily !

ஆனால், இந்த இளம் பெண்களின் கைகளில் மண் வெறும் மண்பாண்டமாக மட்டும் உருவாவதில்லை. அதற்கு மதிப்புக் கூட்டி நவீன கலைப்பொருளாக மாற்றுகின்றனர்.
பூம்புகார் நிறுவனம் வாயிலாக மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சியைப் பயன்படுத்தி, மண்பாண்டப் பொருட்களைப் புதுமையான வடிவங்களில் தயாரிப்பது, அவற்றுக்கு வண்ணம் தீட்டுவது, அழகுபடுத்துவது, சந்தைப்படுத்துவது எனத் தங்களது திறமையை வளர்த்துக்கொண்டுள்ளனர்.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சின்னங்கள் கொண்ட சாவிக்கொத்துகள், கரடி, முயல், யானை பொம்மைகள், மீன் வடிவங்கள், விதவிதமான உண்டியல்கள் எனப் பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் வகையில் பொருட்களை உருவாக்குகின்றனர். வீடுகளுக்கு அழகூட்டும் தோரணங்கள், அலங்காரப் பொருட்கள், மண் மாலைகள் எனப் புதுமையான தயாரிப்புகளும் இவர்களது கைவண்ணத்தில் உருவாகின்றன.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு பொருளை உருவாக்குவதோடு இவர்களது வேலை முடிந்துவிடுவதில்லை. மண்ணைத் தேர்ந்தெடுப்பது, தேவையான வடிவத்தை உருவாக்குவது, உலர்த்துவது, சுடுவது, பின்னர் வண்ணம் தீட்டி அழகுபடுத்துவது என ஒவ்வொரு கட்டத்திலும் கைவினைத் திறனும் பொறுமையும் வெளிப்படுகின்றன.
இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் மண்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. உள்ளூர் சந்தைகளைக் கடந்து பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொருட்காட்சிகளிலும் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளுக்கும் மானாமதுரையின் மண்பாண்டப் பொருட்கள் சென்றடைவதாகத் தெரிவிக்கின்றனர்.
இவர்களது தொழிலில் மற்றொரு சிறப்பு, ஒரே பொருளை நம்பி ஆண்டு முழுவதும் காத்திருப்பதில்லை என்பதுதான். ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றவாறு தயாரிப்புகளை மாற்றிக்கொள்கின்றனர். கார்த்திகையில் தீப விளக்குகள், தை மாதத்தில் பொங்கல் பானைகள், கோடைக்காலத்தில் தண்ணீர் பானைகள் என மக்களின் தேவைக்கு ஏற்ப மண்ணுக்குப் புதிய வடிவம் கொடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இளம் பெண்களின் முயற்சிக்குப் பின்னால் இருப்பது வெறும் வருமானம் மட்டுமல்ல. படித்துவிட்டு வேறு நிறுவனங்களை நம்பி வேலைக்காகக் காத்திருப்பதைவிட, தங்களது முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரியத் தொழிலுக்கு நவீன வடிவம் கொடுத்து தங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பம்.
மேலும், தாங்கள் கற்றுக்கொண்ட இந்தக் கலையைத் தங்களது குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து, அடுத்த தலைமுறைக்கும் இந்தப் பாரம்பரியத் தொழிலைக் கொண்டு சேர்ப்பதையே தங்களது முக்கியப் பணியாகக் கருதுகின்றனர்.

ஒருபுறம் நவீன உலகம் புதிய வேலைவாய்ப்புகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் படித்த இளம் பெண்கள் தங்களது மண்ணையும் முன்னோர் தொழிலையும் நம்பிக்கையுடன் கையில் எடுத்துள்ளனர்.
மண்ணில் உருவாவது வெறும் பொருட்கள் அல்ல... ஒரு தலைமுறையின் பாரம்பரியம், இளம் பெண்களின் தன்னம்பிக்கை, அவர்களது எதிர்காலத்திற்கான வாழ்வாதாரம்!
மானாமதுரையின் இந்த இளம் பெண்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான்: பாரம்பரியத் தொழிலுக்கு புதுமை சேர்த்தால், அதுவே புதிய தலைமுறையின் வெற்றிப் பாதையாக மாறும்!




