← முகப்பு

2200 ஆண்டுகள் பழமையான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமான அரச கல்லறையின் தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2200 ஆண்டுகள் பழமையான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

வட ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள எகிப்து, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களின் தொட்டிலாகவும், நவீன மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமானதாகவும் விளங்குகிறது.

அங்குள்ள அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஹெலனிக் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிரேக்கத் தொல்லியல் குழு, பண்டைய அரச குடும்பத்தினர் வசித்த ஷ்ல்லத் பூங்காவில் ஒரு முக்கிய அகழாய்வை நடத்தி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அனுபவமிக்க தொல்லியலாளர் கலியோப் லிம்னியோஸ்-பாபாகோஸ்டா தலைமையில் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி, 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனம் கடந்த நவம்பர் 20ம் தேதி தங்களின் முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி எகிப்தில் அமைந்துள்ள பண்டைய அலெக்ஸாண்ட்ரியா பகுதியில் உள்ள ஷல்லத் பூங்காவில், சுரங்கப் பாதை மற்றும் சதுர வடிவிலான தளத்தை கண்டறிந்துள்ளது.

ஆராய்ச்சியில் இருந்த சவால்கள்

தற்போதைய நவீன அலெக்ஸாண்ட்ரியா நகரம் பண்டைய இடிபாடுகளின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளதால், இங்கு அகழாய்வு செய்வது மிகவும் சிக்கலானது. குறிப்பாக, அதிகப்படியான நிலத்தடி நீர் கசிவு மற்றும் நவீன நகர்ப்புறக் கட்டுமான அடுக்குகள் ஆகியவை தொல்லியலாளர்களுக்குப் பெரும் சவாலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் பூங்காவின் ஆழத்தில் புதைந்திருந்த முக்கியக் கட்டுமான எச்சங்களை இக்குழுவினர் வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.

கண்டறியப்பட்ட கட்டமைப்புகளின் சிறப்பம்சங்கள்

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட எச்சங்கள், பண்டைய கட்டிடக்கலையின் பிரம்மாண்டத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. அதில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

மிகப் பெரிய சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட ஒரு சதுர அடித்தளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடித்தளத்தின் பரப்பளவும், கற்களின் உறுதித்தன்மையும் இதன் மீது ஒரு மிகப் பெரிய, வானுயர்ந்த நினைவுச்சின்னம் அல்லது கட்டமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

இந்தப் பிரம்மாண்ட அடித்தளத்திற்குக் கீழே, வடக்கு திசையை நோக்கிச் செல்லும் வகையில் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்தக் கட்டுமானத்தையும் பாதுகாக்கும் விதமாக, அதனைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுவரின் எச்சங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நான்காம் தாலமி பிலோபேட்டர் மற்றும் 'செமா' வளாகம்

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்லியல் அமைச்சர் ஷெரிஃப் ஃபத்தி, உச்ச தொல்லியல் கவுன்சிலின் மூத்த அதிகாரி ஐமன் அஷ்மாவ் தலைமையில் உயர்மட்டச் சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இக்குழுவில் அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகம் மற்றும் தந்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த கிரேக்க-ரோமன் வரலாறு மற்றும் தொல்லியல் துறைப் பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழுவின் முதற்கட்ட ஆய்வின்படி, கண்டறியப்பட்ட எச்சங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்தை ஆட்சி செய்த நான்காம் தாலமி பிலோபேட்டர் காலத்து அரச கல்லறையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பண்டைய கிரேக்கப் புவியியலாளரும் வரலாற்றாசிரியருமான ஸ்ட்ராபோ தனது வரலாற்றுக் குறிப்புகளில், அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனைப் பகுதியில் அமைந்திருந்த செமா எனப்படும் அரச அடக்க வளாகம் குறித்து விவரித்துள்ளார்.

மாவீரன் அலெக்ஸாண்டர் மற்றும் தாலமி வம்சத்து மன்னர்களின் கல்லறைகள் இந்த வளாகத்திற்குள்ளேயே அமைந்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

தற்போதைய கண்டுபிடிப்பு, வரலாற்றில் மறைந்துபோன அந்த 'செமா' வளாகத்திற்கான முக்கியத் தடயமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்தகட்ட ஆய்வுகள்

அலெக்ஸாண்ட்ரியா நகரில் இதுவரை தாலமி வம்சத்தைச் சேர்ந்த எந்தவொரு மன்னரின் கல்லறையும் நூறு சதவீதம் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

எனவே, தற்போதைய கண்டுபிடிப்பை நான்காம் தாலமியின் கல்லறையுடன் இணைப்பது ஒரு ஆரம்பக்கட்ட அறிவியல் அனுமானம் மட்டுமே என்றும், இதனை உறுதிப்படுத்த மேலதிக ஆதாரங்கள் தேவை என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கண்டறியப்பட்ட கட்டமைப்பின் துல்லியமான பயன்பாடு என்ன, பூமிக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை எங்கு முடிகிறது, மற்றும் அருகிலுள்ள பிற பண்டைய கட்டமைப்புகளுடன் இதற்குள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறியும் நோக்கில், கட்டிடக்கலை மற்றும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !