WWE என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான தொழில்முறை மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனமாகும்.
இது முழுக்க முழுக்க விளையாட்டுப் போட்டி அல்ல. முன்பே திட்டமிடப்பட்ட ஸ்கிரிப்ட் கொண்டு நிகழத்தப்படும் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்,
Buy Now ! Pay Daily !
இருப்பினும் இந்நிகழ்ச்சியில் வீரர்கள் செய்யும் சாகசங்களும் சண்டைகளும் உண்மையான உடல் உழைப்பையும், ஆபத்துகளையும் கொண்டவையாகும்.
இதன் முக்கிய வாராந்திர நிகழ்ச்சிகளான ரா (Raw), ஸ்மாக்டவுன் (SmackDown) மற்றும் என்.எக்ஸ்.டி (NXT) ஆகியவை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படுகின்றன. இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் WWE போட்டிகளுக்குப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் ரெஸில்மேனியா (WrestleMania), ராயல் ரம்பிள் (Royal Rumble), சம்மர்ஸ்லாம் (SummerSlam) ஆகிய போட்டிகள் இதன் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வுகளாகும்.
இந்த நிகழ்ச்சியில் மூலம் தி ராக், ஜான் சீனா, அண்டர்டேக்கர், ரோமன் ரெய்ன்ஸ், ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் போன்ற உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக WWE நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து டபிள்யூ.டபிள்யூ.இ நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரான்சன் ரீட் என்றும் அழைக்கப்படும் ஜெர்மைன் ஹேலி, மருத்துவச் சிக்கல்கள் காரணமாக தனது 38-வது வயதில் இன்று காலை காலமானார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெர்மைன் டபிள்யூ.டபிள்யூ.இ அரங்கில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். அதற்கும் மேலாக, அவர் ஒரு அற்புதமான மனிதர், குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் மற்றும் சக ஊழியர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.
ஜெர்மைனின் கர்ப்பிணி மனைவி பைஜ், அவர்களது மகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, சவுதி அரேபியாவில் நடைபெற்ற 'கிரவுன் ஜுவல்' போட்டியில்தான் பிரான்சன் ரீட் கடைசியாகப் பங்கேற்றிருந்தார்.
அதில், பிரான் பிரேக்கர் மற்றும் ஆஸ்டின் தியரி ஆகியோருக்கும், பென்டா மற்றும் ஜெவான் எவன்ஸ் ஆகியோருக்கும் இடையிலான உலக டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் தலையிட்டார்.
பிரேக்கர் மற்றும் தியரி ஆகியோர் தங்கள் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ரீட் உதவ முயன்றபோது, ஒபா ஃபெமி குறுக்கிட்டு ரீட்டைத் தூக்கி மேஜையின் மீது வீசினார்.
இந்த மோதலில் ரீட்டுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் சிறுநீரகத்தில் கிழிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக சவுதி அரேபியாவிலேயே தங்கியிருந்த அவர், பின்னர் அமெரிக்கா திரும்பினார்.
கிரவுன் ஜுவல் போட்டியில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை டபிள்யூ.டபிள்யூ.இ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது. எனினும், அப்போது ஏற்பட்ட காயங்களுக்கும், தற்போது அவரது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த மருத்துவச் சிக்கல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அந்நிறுவனம் வெளியிடவில்லை.






