தமிழக அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆம்பூர் மற்றும் மாதனூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதன்படி, புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஆம்பூர் புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிட்ட அவர், மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட உணவின் தரம் மற்றும் சுகாதார வளாகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டுமானப் பணிகள், அங்கன்வாடி மையம், அரசு சமுதாய மருத்துவமனை, விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் கூட்டுறவு நியாய விலைக் கடை ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் மாதனூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Buy Now ! Pay Daily !
தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், மழைக்காலத்தில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியையும் காய்ச்சல் பரவலையும் தடுக்க முடியும் என்று அறிவுறுத்தினார். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், மின்னணுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசின் நலத்திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்றும், தகுதியுள்ள அனைவரும் அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் கேட்டுக்கொண்டார்.






