திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட சலாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அன்றாடம் கிடைக்கும் கூலி வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் இவர், குடும்பத்தின் அவசரச் செலவுகளுக்காக தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் சம்பளப் பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார்.
Buy Now ! Pay Daily !
அப்போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10 ஆயிரம் சம்பளத் தொகையுடன் சேர்த்து, ரூ.5 கோடியே 53 லட்சத்து 57 ஆயிரத்து 725 எதிர்மறை இருப்பு (மைனஸ் பேலன்ஸ்) இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த லியாகத் அலி, இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டுள்ளார்.
அப்போது வங்கி நிர்வாகம் தெரிவித்த தகவல் அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, லியாகத் அலியின் பெயரில் சென்னை மின்ட் பகுதியில் உள்ள பரசுராமன் தெரு முகவரியில் 'எம்.எஸ். டிரேடர்ஸ்' என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனம் 2024-2025 நிதியாண்டில் ரூ.5 கோடியே 53 லட்சத்து 63 ஆயிரத்து 217 ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை புரசைவாக்கம் வணிகவரித் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதில், சுமார் ரூ.2.02 கோடி சிஜிஎஸ்டி (CGST), ரூ.2.02 கோடி எஸ்ஜிஎஸ்டி (SGST), ரூ.1.47 கோடி ஐஜிஎஸ்டி (IGST) என மொத்தம் ரூ.5.53 கோடி வரி நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரியைச் செலுத்தத் தவறியதால் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், சென்னையில் தனக்கு எந்தவொரு வணிக நிறுவனமும் இல்லை என்றும், தனது ஆவணங்களை யாரோ சிலர் முறைகேடாகப் பயன்படுத்தி போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்து நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் தனக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்துள்ளதைக் கண்டு செய்வதறியாது திகைத்துள்ளார். இதையடுத்து, தனது ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பெற முடியாது என்றும், ஜிஎஸ்டி அலுவலகத்தில் புகார் அளிக்குமாறும் காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கூலித் தொழிலாளர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியா?
ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களைத் தொடங்கி, கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் மோசடி கும்பல் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, லியாகத் அலியின் ஆவணங்களைப் பயன்படுத்தி நிறுவனம் பதிவு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கி அவருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


