கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே முழுக்குத்துறை பகுதியைச் சேர்ந்த அய்யனாரப்பனின் மகன் பிரசாத். மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வந்த இவர், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் வேலை செய்ய முடிவெடுத்து, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஓமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த பிரசாத், கடந்த 8-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பிரசாத் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. வேலைக்காக வெளிநாடு சென்ற மகன், இனி வீடு திரும்ப மாட்டார் என்ற செய்தி குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. மகனின் மரணச் செய்தியால் துயரத்தில் இருக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலைக் காணவும், சொந்த ஊரில் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவும் காத்திருக்கின்றனர்.
Buy Now ! Pay Daily !
வெளிநாட்டில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தால், பிரசாத்தின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனவே, தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தேவையான நடைமுறைகளை விரைந்து முடித்து பிரசாத்தின் உடலை மீட்டு அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவ வேண்டும் எனத் தந்தை அய்யனாரப்பன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.






