அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான ’CAIT’ இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களை ஒன்றிணைத்துச் செயல்படும் முதன்மைத் தேசிய அமைப்பாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ள வியாபார் பவனில் செயல்படுகிறது.
இந்நிறுவனம், நாட்டின் 25 மாநிலங்களைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் மற்றும் 300-க்கும் அதிகமான வர்த்தகத் தலைவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் அடுத்து வரப்போகும் 25 நாட்களில் இந்திய நாட்டில் எத்தனை திருமணங்கள் நடைபெற போகிறது, அதன் மூலம் இந்திய சந்தையில் எவ்வளவு வர்த்தகம் நடைபெறப் போகிறது என்கிற கணிப்பை வெளியிட்டிருந்தது.
Buy Now ! Pay Daily !
அதில், இந்தியாவில் அடுத்த 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்றும். இதன் மூலம் இந்திய சந்தையில் ரூ.7.5 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று கணித்துள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறவுள்ள இந்த காலகட்டத்தில், சில்லறை விற்பனை முதல் சேவைத் துறை வரை பெரும் உத்வேகத்தை அளிக்கும் எனவும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளிடம் பேசு பொருளாகியுள்ளது.
மேலும் மொத்த வர்த்தகமான ரூ.7.5 லட்சம் கோடியில், 54 சதவீத பொருட்கள் கொள்முதல் மூலமும், மீதமுள்ள 46 சதவீதம் சேவைத் துறைகள் மூலமும் ஈட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் எதிர்பார்க்கப்படும் வர்த்தக மதிப்பு பின்வருமாறு:
- இந்திய திருமணங்களில் வர்த்தக ரீதியில் முக்கியமாக பார்க்கப்படும் பொருள் ஆபரணத் தங்கம். வரப்போகும் 25 நாட்களில் தங்க விற்பனை அதிகபட்சமாக ரூ.1.2 லட்சம் கோடியையும், ஆடை மற்றும் ஜவுளித் துறை ரூ.90,000 கோடியையும் எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும் திருமணத்திற்கான மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் ஆகியவை தலா ரூ.37,500 கோடி அளவிற்கு வர்த்தகத்தைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு அடுத்தபடியாக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உலர் பழங்கள் மற்றும் இனிப்புகள், மரச்சாமான்கள், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய ஒவ்வொன்றும் தலா ரூ.30,000 கோடி பங்களிப்பை வழங்கும்.
- சேவைத் துறையைப் பொறுத்தவரை, உணவு தயாரிப்பு சேவைகள் ரூ.75,000 கோடியுடன் முதலிடத்தில் உள்ளன. திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மூலம் ரூ.60,000 கோடியும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மலர் அலங்காரத் துறைகள் மூலம் தலா ரூ.37,500 கோடியும் வருவாய் ஈட்டப்படும்.
- மேலும், போக்குவரத்து மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு தலா ரூ.30,000 கோடியும், புகைப்படம் மற்றும் அழகுக்கலை சேவைகளுக்கு தலா ரூ.22,500 கோடியும் செலவிடப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள் என்பவை வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு வணிகர்களை ஒன்றிணைத்துப் பொருளாதாரச் சுழற்சியை வலுப்படுத்துவதாகக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், நுகர்வோர் இந்தியத் தயாரிப்புகளுக்கும் உள்ளூர் வணிகர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, டிஜிட்டல் அழைப்பிதழ்கள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய திருமணத் திட்டமிடல் போன்ற நவீன சேவைகளும் இத்துறையில் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.






