தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவைத் தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும், தவெக ஆட்சி நீடிக்காது என்றும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில், தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவால் கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Buy Now ! Pay Daily !
தமிழகத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கனவே 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தொகுதி மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மூலம் வேட்பாளர் தேர்வு தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுகுறித்து முடிவெடுக்கலாம் என ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ. ராசா, பொன்முடி, முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






